கடந்த வாரம் ஜல்லிக்கட்டு நிகழ்வுக்காக மதுரை வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த வாரம் கோவைக்கு வருகை புரிந்திருக்கிறார்.
இன்று (ஜனவரி 23) காலை கோவைக்கு விமானத்தில் வந்த ராகுல் காந்தி 23,24,25 என மூன்று நாட்கள் கொங்கு மண்டலத்தில் சுற்றுப் பயணம் செய்கிறார்.
இன்று காலை 11.30 கோயம்புத்தூர் விமான நிலையம் வந்த ராகுலுக்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்த ராகுல், “பிரதமர் நரேந்திர மோடி மீது தமிழக கலாச்சாரம், மொழி மற்றும் மக்கள் மீது எந்த மரியாதையும் இல்லாததால் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறார். தமிழ் மக்களின் மொழி மற்றும் கலாச்சாரம் ஆகியவை தனது கருத்துக்களுக்கு அடிபணிய வேண்டும் என்று மோடி நினைக்கிறார். ஆனால் தமிழ் மக்களை ஒருபோதும் அதிகாரத்துக்கு அடிபணிய வைக்க முடியாது.
தமிழக மக்கள் அரசாங்கத்தில் மாற்றத்தை விரும்புகிறார்கள். “கடந்த காலத்தில் தமிழகம் தொழில்மயமாக்கலில் வெற்றியை அடைந்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக இப்போது தமிழகம் பல்வேறு உரிமைகளை இழந்து வருகிறது. மேலும் விவசாயிகள் சிரமப்படுகிறார்கள். அதனால்தான், மக்கள் புதிய அரசாங்கத்தை விரும்புகிறார்கள். மக்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்ற நான் தமிழகத்திற்கு வந்துள்ளேன். ”
தொழிலதிபர்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு நான் உதவுவேன்” என்று பேசினார் ராகுல் காந்தி.
இன்று சிறுகுறு தொழில் முனைவோர்களுடன் சந்திப்பு நடத்திய ராகுல் காந்தி மூன்று நாட்களில் இன்னும் பல நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்.
**-வேந்தன்**
�,