தாம்பரத்தில் பட்டா கத்தியுடன் சுற்றித் திரிந்த இளைஞர்களை போலீசார் பிடித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், திருச்சியில் நவல்பட்டு காவல்நிலைய எஸ்எஸ்ஐ ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஆடு திருடும் கும்பலால் கொலை செய்யப்பட்டார். அதுபோன்று மதுரை அருகே சொகுசு வாகனத்துக்கு வழிவிடாததால், அரசு பேருந்து ஓட்டுநர், இளைஞர் ஒருவரால் தாக்கப்பட்டார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சென்னையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இளைஞர்களை போலீசார் பிடித்துள்ளனர்.
தாம்பரம் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் நேற்று மாலை தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த 5 பேரிடம் போலீசார் விசாரித்துள்ளனர்.
இதனால் 5 பேரில் ஒருவர் தப்பித்து ஓட, விஜய் (எ) பிரதீப், கருப்பு லோகேஷ் (எ) லோகேஷ்வரன், தங்கதுரை, ஆலன் ராஜ் ஆகிய 4 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் போலீசார் சோதனை செய்ததில், ஒருவருடைய பேண்ட்டில் ஒன்றரை அடி நீளத்துக்கு பட்டா கத்தி இருந்தது தெரியவந்தது.
அதோடு மட்டுமின்றி போதை ஊசி இருந்ததாகவும், இதில் பிரதீப் மற்றும் லோகேஷ்வரன் மீது தாம்பரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள் இருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தப்பியோடிய டேவிட்ராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். அதே சமயத்தில் கைதானவர்களிடம் எதற்காகப் பட்டாக்கத்தியுடன் கூட்டாக நின்றுகொண்டிருந்தனர், வழிபறி செய்யத் திட்டமிட்டிருந்தனரா? அல்லது யாரையேனும் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பட்டாக்கத்தியுடன் திரியும் கலாச்சாரம் ஆரம்பிக்க தொடங்கியுள்ளது.
இடம்: தாம்பரம்.???????????? pic.twitter.com/GHU54XkI3C
— PS.MARIAPPAN.ADMK, IT WING (@PSM21975640) November 25, 2021
போலீசார் இளைஞர்களைப் பிடித்தது குறித்த வீடியோவை பகிர்ந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, திமுகவினரால் அரசு அதிகாரிகள் மிரட்டப்படுதல், அதிகார துஷ்பிரயோகம், சமூக ஊடகவியலாளர்களை அச்சுறுத்துதல், காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் பணி செய்யும் போது சமூக விரோதிகளால் தாக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளன. அந்த வரிசையில் நேற்று தாம்பரம் அருகே காவல்துறையினரின் வாகன சோதனையின் போது பட்டாக்கத்தியுடன் இளைஞர்கள் பிடிபட்டுள்ளது காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சிக்கு வரும் பொழுதும் தமிழகம் அமைதி பூங்கா என்ற பட்டத்தை இழந்து வருவதற்கு இது மற்றும் ஒரு எடுத்துக்காட்டு” என்று விமர்சித்துள்ளார்.
**-பிரியா**
�,”