ரிப்பன் மாளிகையை ஆளப்போகும் இளம் பெண்: யார் இவர்?

Published On:

| By admin

தமிழகத்தில் மாநகராட்சிகளுக்கான மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நாளை (மார்ச் 4) நடைபெறுகிறது. சென்னையில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 153 கவுன்சிலர்களை பெற்று திமுக வெற்றி பெற்றது. சென்னை மேயர் பதவியானது, பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து சென்னையின் மேயர் யார் என்ற கேள்விதான் அனைவரிடத்திலும் இருந்து வந்தது. இதில் விசிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற யாழினியைச் சென்னை மேயர் பதவிக்குப் பரிந்துரை செய்தால் விசிக என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகக் கூறப்பட்டது.

ஆனால், சென்னை மேயர் பதவி என்பது திமுகவுக்குத் தான். அதை யாருக்கும் விட்டுக் கொடுத்துவிட முடியாது. சென்னை மாநகராட்சியைப் பட்டியலின பெண்களுக்குக் கொடுத்தது உங்களின் மிகப்பெரிய வரலாற்றுப் புரட்சி. அந்த புரட்சியை ரிப்பன் மாளிகையில் திமுக மேயர் தான் செயல்படுத்த வேண்டும் என்று [சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்கள் முதல்வரிடம் கூறியிருக்கிறார்கள்.](https://minnambalam.com/politics/2022/02/25/36/thirumavalavan-chennai-mayor-stalin-sekarbabu-shock)

இந்நிலையில் இன்று காலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை மேயர் பதவிக்கு, ஆர்.பிரியா, எம்.காம்., போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

28 வயதான பிரியா சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.காம் படித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் 78ஆவது வார்டில் போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர்களை விட 6,299‬ வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

153 கவுன்சிலர்களை கொண்ட திமுக சார்பில் போட்டியிடும் பிரியாவுக்கு மேயர் பதவி கிட்டத்திட்ட உறுதியாகியுள்ளது. சென்னை மாநகராட்சி வரலாற்றில் 3ஆவது பெண் மேயர் பிரியா ஆவார். இதற்கு முன்னர், சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக தாரா செரியன் (1957-1958) இருந்தார். அதன்பின் காமாட்சி ஜெயராமன் (1971-1972) இருந்தார்.
தற்போது 28 வயதான பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

இதுவரை தென் சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சென்னை மேயராக பதவி வகித்து வந்த நிலையில், வடசென்னையிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் மேயர் என்ற பெருமையும் பிரியாவைச் சேரும். பிரியா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவத்தின் பேத்தி ஆவார். இவரது தந்தை ஆர்.ராஜன். இவர் அந்த பகுதியின் திமுக இணை செயலாளர் ஆவார்.

மேயராவது குறித்து தந்தி டிவிக்கு பிரியா கொடுத்துள்ள பேட்டியில், சென்னை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக என்னை தேர்ந்தெடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலில் வெற்றி பெற்றதே மகிழ்ச்சிதான். தற்போது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது.

மேயர் பதவியை நான் ஒரு பதவியாக பார்க்கவில்லை. இதை ஒரு சேவையாகப் பார்க்கிறேன். குறிப்பாகக் கழிவு நீர் வடிகால் தான் இங்கு முக்கிய பிரச்சினை உள்ளது. இதுபோன்று எந்த பிரச்சினையாக இருந்தாலும் முதல்வர் வழிகாட்டுதலின் படி சென்னை மாநகராட்சிக்குச் சிறந்த திட்டங்களைச் செயல்படுத்துவேன்” என்று கூறினார்.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share