�தமிழக அரசு ரேஷன் மூலம் தரும் பணத்தை ரேஷன் கடைகளின் மூலம் கொடுக்காமல், வங்கிக் கணக்குகள் மூலம் அதை கொண்டு சேர்க்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
நேற்று (ஜூன் 7) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக அரசு கொரோனா நிவாரண நிதியாக தரும் ரூபாய் ரேஷன் கடைகளில் நேரடியாக வழங்கப்படுவதால் அங்கே மக்கள் நெருக்கடி ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க பிரதமரின் விவசாயிகள் உதவித் தொகைத் திட்டத்தைப் போல, மாநில அரசு ரொக்கத்தை நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்திவிட வேண்டும்”என்று கோரிக்கை வைத்தார்.
மேலும், “தேர்தலின் போது திமுகவால் அறிவிக்கப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கான மாத உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் எப்போது வழங்கப்படும் என்று ஆவலாகக் காத்திருக்கிறார்கள்”என்று குறிப்பிட்டார் முருகன்.
மேலும் பிரதமரின் உரையை அடுத்து நேற்று இரவு முருகன் வெளியிட்ட வீடியோவில், “ ஜூன் 21 முதல் தடுப்பூசிகளை அனைவருக்கும் இலவசமாக தருவோம் என்று அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவில் இருந்து மீண்டு வருவதற்கு மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மேலும் வரும் நவம்பர் மாதம் வரை ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குவதாகவும் இதனால் 80 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். இதற்காக தமிழக மக்கள் சார்பாகவும் பாஜக சார்பாகவும் பிரதமர் மோடிக்கு நன்றி பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார் முருகன்.
**-வேந்தன்**
�,