தமிழகத்திலிருந்து ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்ப, 20 முதல் 50 கிலோ வரை அரிசி, மண்ணெண்ணெய், கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படுகின்றன. இவற்றை சில கொள்ளை கும்பல் கடத்தி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு எடுத்துச் சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது தொடர்கதையாகி வருகிறது. இதனால் தமிழக குடும்ப அட்டைதாரர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்திலிருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், தமிழகத்திலிருந்து ஆந்திரா வழியாகக் கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும். வாணியம்பாடி, தும்பேரி, பேர்ணாம்பட்டு வழியாக ரேஷன் அரிசி அதிகளவில் கடத்தப்படுகிறது. தனது குப்பம் தொகுதியில் கடந்த 16 மாதங்களில் ரேஷன் அரிசி கடத்துவது தொடர்பாக 13 வழக்குகள் பதிவாகியுள்ளன.
கொள்ளை கும்பல் தமிழகம், ஆந்திரா எல்லை வழியாக ஆந்திராவுக்கு ரேஷன் அரிசியைக் கடத்தி வந்து ஆந்திராவில் உள்ள ரைஸ் மில்களுக்கு கொடுக்கின்றனர். அங்கு ரேஷன் அரிசி பாலிஷ் செய்யப்பட்டு மீண்டும் கொள்ளை கும்பலிடமே வழங்கப்படுகிறது. பின்னர் இதனை வெளிச் சந்தையில் விற்கின்றனர் அல்லது கர்நாடகாவுக்கு அனுப்புகின்றனர். வெளிச்சந்தையில் ரேஷன் அரிசி ரூ. 40க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எனவே உடனடியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதைத் தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
**-பிரியா**