மின்னம்பலம் செய்தி: வேளாண் துறையில் அதிரடி நடவடிக்கை!

Published On:

| By admin

விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் வேளாண் உபகரணங்கள் வெளிமார்க்கெட்டை விட அதிக விலை வைத்து விற்கப்படுவதையும், இதனால் விவசாயிகள் மானிய விலை உபகரணங்களை வாங்காமல் வெளி மார்க்கெட்டிலேயே வாங்கத் தயாராக இருப்பதையும் மின்னம்பலத்தில் நேற்று (ஜூன் 10) காலை 7 மணி பதிப்பில் வெளியிட்டிருந்தோம்.

[வெளிமார்க்கெட்டில் உபகரணங்கள்: வேளாண் துறை வில்லங்கம்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/politics/2022/06/10/11/Officials-sell-subsidized-goods-to-farmers-at%20high-prices) என்ற தலைப்பிடப்பட்ட அந்த செய்தியில் நம்மிடம், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் ராம கவுண்டர், தர்மபுரி மாவட்டம் இருமாத்தூரைச் சேர்ந்த விவசாயி முருகன் ஆகியோர் வேளாண் உபகரணங்கள் அரசு மானியத்தோடு கொடுக்கும் விலையை விட வெளி மார்க்கெட்டில் குறைவாக இருப்பதை எடுத்துக் காட்டுகளோடு நம்மிடம் எடுத்துச் சொல்லியிருந்தனர்.

நமது செய்தி ஜூன் 10 ஆம் தேதி காலை 7 மணிக்கு வெளியானதுமே சுமார் அரைமணி நேரத்துக்குள் முதல்வர் அலுவலகத்தில் இருந்து வேளாண் துறை செயலாளர் சமயமூர்த்தி ஐ..ஏ.எஸ்.,சுக்கு, ‘மின்னம்பலத்தில் வந்திருக்கும் இந்த செய்தி குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தகவல் அனுப்பப்பட்டது.

இதையடுத்து வேளாண் துறை செயலாளர் அலுவலகத்தில் இருந்து வேளாண் பொறியியல் துறையின் தலைமைப் பொறியாளர் முருகேசனுக்கு மின்னம்பலம் தகவல் அனுப்பப்பட்டு விசாரிக்க உத்தரவிட்டார் செயலாளர்.
அதன்படியே நேற்று காலை சென்னை நந்தனத்தில் இருக்கும் வேளாண் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. வேளாண் உபகரணங்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் கொடுப்பதே அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் அரசு கொடுப்பதை விட வெளி மார்க்கெட்டில் குறைவாக இருக்கிறது என்றால் தவறு எங்கே நடந்திருக்கிறது என்று கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அப்போதுதான் ஸ்ப்ரேயர் சப்ளை செய்யும் மும்பையைச் சேர்ந்த ஆஸ்பீ அக்ரோ எக்யூப்மென்ட்ஸ் என்ற நிறுவனம் ஒரே ஸ்ப்ரேயரை வேளாண் துறைக்கு 2650 ரூபாய் என்ற விலைக்கும், வேளாண் பொறியியல் துறைக்கு 3000 ரூபாய் என்ற விலைக்கும் சப்ளை செய்திருப்பதும் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து அந்த நிறுவனத்துக்கும் கடிதம் எழுதியுள்ள வேளாண் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர், “மின்னம்பலம் இணைய தள செய்தியில் அரசு அளிக்கும் வேளாண் உபகரணங்கள் வெளிமார்க்கெட் விலையை விட அதிகமாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள். உடனடியாக இந்த விலை நிர்ணயத்தை மாற்றி அமைத்து விவசாயிகளுக்கு பயனளிக்கும் திட்டமாக இதை செயல்படுத்த வேண்டும்” என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அரசு அனுப்பியுள்ள அந்த கடிதத்தில் மின்னம்பலம் இணைய தள செய்தி என்று குறிப்பிடப்பட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு மாவட்ட வேளாண் துறை உதவி இயக்குனர்களுக்கும் வேளாண் பொறியியல் துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் இருந்து விவசாயிகளுக்கு 2650 ரூபாய் என்ற விலையிலேயே ஸ்ப்ரேயரை வழங்கிட வேண்டும் என்று நேற்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த 2650 ரூபாயே அதிக விலைதான் என்ற நிலையில், இதையும் குறைக்க நடவடிக்கை எடுப்பதற்காக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்கிறார்கள் வேளாண்மை துறை அதிகாரிகள்.

இந்தத் தகவலை நம்மிடம் முறையிட்ட விவசாயிகளிடம் நாம் தெரிவிக்கும்போது, “மின்னம்பலத்தில் மக்களுக்கான பிரச்சினைகளை உண்மையாக எழுதுகிறீர்கள். அதற்கு கிடைத்த வெற்றிதான் இது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் மற்ற வேளாண் உபகரணங்கள் விலையையும் நியாயமாக நிர்ணயிக்க மின்னம்பலம் செய்தி உதவும்” என்று நன்றி தெரிவித்தனர்.

-**வணங்காமுடி**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share