அரசு பணியாளர்களுக்கு தமிழ் புலமை அவசியம்: பிடிஆர்

Published On:

| By Balaji

தமிழ்நாட்டில், தமிழ் மக்களோடு பணியாற்றும் அரசு பணியாளர்களுக்கு தமிழ் புலமை அவசியம் என்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வில் தமிழ் மொழி பாடத்தாளை கட்டாயமாக்கி நேற்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று(டிசம்பர் 4) நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பசுமை வழி சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடை பணியாளர் தேர்வாணையம், வனத் துறை மற்றும் மின்சார வாரிய தேர்வு என எந்த தேர்வாக இருந்தாலும் தமிழ்நாடு பற்றி தமிழில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே இனி அரசு பணி கிடைக்கும். தமிழ்தாளில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றிற்கு தகுதி பெற முடியும்.

இந்த அரசாணை மூலம் கிராமபுறங்களில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு நல்ல பயன் அளிக்கும். சமூக நீதியையும், அனைவருக்கும் வாய்ப்பு என்பதையும் அதிகரிக்கும். மேலும் முதல் பட்டதாரி மற்றும் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு ஆகியவை ஏற்கனவே கொண்டுவரப்பட்டுள்ளது.

அரசு பணிகள் மிகவும் முக்கியமானது. அரசியல்வாதிகள் தற்காலிகமானவர்கள். தேர்தலுக்கு தேர்தல் மாறுவார்கள். அரசு அதிகாரிகள் நிரந்தரமானவர்கள். அதனால் சரியானவர்களை, சமத்துவமாக தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் பணியில் 15 லட்சம் காலியிடங்கள் உள்ளன. ஆனால், 9 லட்சம் பேர் மட்டுமே பணியில் உள்ளனர். சிறந்த அரசு பணியாளர்களை தேர்வு செய்ய இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இதனால் ஆங்கிலவழி கல்வியில் படித்தவர்கள் பாதிக்கப்படுவார்களே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,”முனைவர் பட்டம் தகுதி அளவிற்கு தமிழ் தெரிய வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. பத்தாம் வகுப்பு தமிழ் பாடம் அளவிற்கு அறிந்திருந்தால் போதுமானது. ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ எனும் தத்துவத்தின் அடிப்படையில் தான் செயல்படுகிறோம். அனைத்து சமுதாயத்தில் இருந்தும், கிராமங்களில் இருந்தும் அரசு பணியில் பங்களிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு பிடிக்கவில்லை எனில் நீதிமன்றம் செல்லட்டும் இங்கு யார் யார் தமிழர் என்பதை அடையாள படுத்த முடியாது. ஆனால் தமிழ் கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “கொரோனா காலத்தில் வெளி மாநிலப் பணியாளர்கள் காரணமாக நிர்வாகத்தில் பல தவறுகளும் குளறுபடிகளும் ஏற்பட்டன. இதனைக் களைவதற்காக அரசுப் பணியாளர்களுக்குத் தமிழ்ப் புலமை இருப்பது அவசியமாக்கப்பட்டுள்ளது.

போட்டித் தேர்வின் அடிப்படை முறைகளில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளது. ஏற்கனவே போட்டித் தேர்வுக்குத் தயாராக இருந்த மாணவர்கள் கொரோனா பரவல் காரணமாகத் தேர்வுகள் எழுத முடியாத நிலை ஏற்பட்டது. போட்டித் தேர்வுக்கெனத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு இருக்கும் தமிழ் இளைஞர்களின் தாகம் புரிந்ததாலேயே தமிழ் மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அவர்களின் கவலைகளைப் போக்க இதுவே தக்க தருணம் என்பதைத் தமிழ்நாடு அரசு உணர்ந்து இத்திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. விரைவில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்படும்” என்று கூறினார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share