தடுப்பூசி செலுத்துவதில் மிக விரைவில் தேசிய அளவிலான இலக்கை அடைவோம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் ரோட்டரி கிளப் சார்பில், ‘உலக போலியோ தினத்தை’ முன்னிட்டு நேற்று(அக்டோபர் 24) காலை சென்னை ராணிமேரி கல்லூரி அருகே போலியோ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சைக்கிள் பிரச்சார பேரணியை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,” உலக போலியோ தினம் அக்டோபர் 24 ஆம் தேதியன்று கடைபிடிக்கப்படுகிறது. போலியோ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த அக்டோபர் 23ஆம் தேதி ஆறாவது கட்ட மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெற்றது. இதில், 23 லட்சத்து 27,907 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இரண்டாவது தவணை தடுப்பூசியை 14 லட்சத்து 68,457 பேரும், முதல் தவணை தடுப்பூசியை 8 லட்சத்து 59,450 பேரும் செலுத்திக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியவர்கள் ஏராளம். இதுவரை முதல் தவணையை செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 69 சதவிகிதமாகவும், இரண்டாம் தவணையை செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 29 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு, இந்திய அளவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை சதவீத அடிப்படையில் குறைவாக இருக்கிறது என்றாலும், மிக விரைவில் தேசிய அளவிலான இலக்கை எட்டுவோம். அதற்காக நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்வோம். நேற்று விடுமுறையை தொடர்ந்து இன்று வழக்கம்போல் தடுப்பூசி பணி செலுத்தும் பணிகள் நடைபெறும்” என்று கூறினார்.
**-வினிதா**
�,