டிஎஸ்எஸ் மணி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ’ஓரங்கட்டப்படுகிறாரா சீதாராம் யெச்சூரி?’ என்ற மின்னம்பலத்தில் வெளிவந்த கட்டுரை குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.
அதன் விளைவாக குறிப்பாக கேரள மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து சில புதிய விளக்கங்கள் வந்து விழுந்தன.
நாம் மேற்கண்ட கட்டுரையில், ’கடந்த கட்சிக் காங்கிரஸ் முன்பு வைக்கப்பட்ட இரண்டு அறிக்கைகளில், ஒன்று யெச்சூரி முன்வைத்தது, மற்றது பிரகாஷ் காரத் முன்வைத்தது’ என்று கூறியிருந்தோம். யெச்சூரி அறிக்கையில் மோடி அரசை, ’ பாசிசம்’ என்று முத்திரை குத்தப்பட்டதையும் கூறியிருந்தோம். பிரகாஷ் காரத் முன்வைத்த அறிக்கையில், மோடி அரசை, ’பாசிசம்’ என்று கூறவில்லை என்பதையும் குறிப்பிட்டிருந்தோம். மார்க்சிஸ்ட் கட்சிக் காங்கிரஸ் யெச்சூரி அறிக்கையை ஏற்றுக் கொண்டு, மோடி அரசை, ’ பாசிசம்’ என்றே கணித்தது.இப்போது, மோடி அரசை ’ பாசிசம்’ என்று வர்ணித்த தோழர் சீதாராம் யெச்சூரி ராஜ்யசபாவிற்கு செல்ல முடியாமல் தடுக்கப்பட்டுள்ளார். இது யாருக்கு நட்டம்?
இந்த விவாதத்தில், கேரள மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள் சிலரிடம் இருந்து ஒரு பதில் வந்தது. அரசியல் சரி செய்தல் (Political Correctness) என்று ஒரு சொல்லாடலைப் பயன்படுத்தி, சில தோழர்கள் பேசுகிறார்கள். கேரள மாநிலத்தில் சிபிஎம் கட்சிக்கு போட்டியாளர் காங்கிரஸ் கட்சிதான். ஆகவே கேரளாவில், அரசியல் சரி செய்தல்களில், காங்கிரஸ் கட்சியின் உதவியைப் பெற்று, சிபிஎம் கட்சி, ஒரு தோழரை மாநிலங்களவைக்கு அனுப்ப முடியாது என்று புரிந்து கொள்ளலாம்.
அதே சமயம்,மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நிலையே வேறு. அங்கு, மம்தா கட்சியான திரிணமூல் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சியை பயன்படுத்திக் கொள்ளவோ, இணைந்து செயல்படவோ, கூட்டு சேரவோ, முயற்சிக்க வேண்டிய கள நிலைமை இருக்கிறது. ஆகவே, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஒரு தோழரை மாநிலங்களவைக்கு அனுப்புவது என்பது சரியான முடிவாக இருக்கும்.
அதாவது, மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கட்சிக்கு காங்கிரஸ் உதவியைப் பெறுவதுதான் அரசியல் சரி செய்தல் என்பதாக இருக்கும். ஆனால், அகில இந்திய அளவில் எது அரசியல் சரி செய்தலாக இருக்கும்? கட்சிக்கு காங்கிரஸ் எடுத்த முடிவுதானே அரசியல் சரி செய்தலாக இருக்கும்? கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ராஜ்யசபா சென்று, அங்கே மோடி அரசை, பாசிச அரசு” என்று குற்றம் சாட்டி பேசுவதற்கான நல் வாய்ப்பை பயன்படுத்தியிருந்தால்தானே, கட்சியின் ’அரசியல் சரி செய்தல்’ என்று அதை அழைக்க முடியும்?
ராஜ்யசபாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரான சீதாராம் யெச்சுரியை, பேரவைத் தலைவர் வெங்கையா நாயுடு பேச விடுவாரா? அல்லது மேற்கு வங்கத்திலிருந்து சென்றுள்ள பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யாவை பேச அனுமதிப்பாரா?. சீதாராம் யெச்சூரி போன்ற ஒரு அகில இந்தியத் தலைவரை பேச அனுமதிக்காமல் இருக்க முடியாதே?. யெச்சூரி மூலம் மோடி அரசை ‘பாசிசம்’ என்று குற்றம்சாட்டும் பேச்சு, ராஜ்யசபாவில் வருமானால், அது உலகமெங்கும் ஊடகங்கள் மத்தியில் பெரிதாக வெளிவருமே? அந்த வாய்ப்பு ஏன் தடுக்கப்பட்டது? இதில், பிரகாஷ் காரத் அணியின் பங்கு என்று குறையைக் கூறுவதை விட வேறு என்ன காரணம் இருக்கிறது.
அடுத்து கேரளத் தோழர்களிடமிருந்து இன்னொரு விளக்கமும் வந்துள்ளது. அதாவது, யெச்சூரியை அனுப்பாதது, ஜனநாயக இருப்பியல்வாதம் (Democratic Existentialism) என்று ஒரு புதிய ’சொல்லாடல்’ வந்துள்ளது. உள்ளபடியே, இருப்பியல்வாதம் { Existentialism }என்பது மார்க்சியத்திற்கு எதிரான கருத்தியல் அல்லது தத்துவச் சொல். கேரள மார்க்சிஸ்ட் கட்சிக்கு காங்கிரஸ் கட்சியின் உதவியைப் பெறாமல் இருப்பதுதான் இருப்பியல்வாதம் என்கிறீர்களா?. கட்சியின், ஜனநாயக மத்தியத்துவம் (Democratic Centralism) போய் அந்த இடத்தில், ஜனநாயக இருப்பியல்வாதம் வந்து விட்டதா?
கேரளாவிலிருந்து இயங்கும், ஏசியா நெட், மீடியா 1 ஆகிய இரண்டு முக்கிய காட்சி ஊடகங்கள், சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களை ஒளி பரப்பியதற்காக, 24 மணி நேரம் மத்திய அரசால் நிறுத்தப்பட்டன. (ஏசியா நெட் ஊடகத்தின் முதலாளி ஒரு பாஜக எம்.பியான ராஜிவ் சந்திரன்). அதை கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் அதிகாரபூர்வ ஏடான ’தேசாபிமானி’ மட்டுமே முதல் பக்கத்திலேயே ‘வாயை மூடிக் கட்டி’ என்று விமர்சித்து இருந்தார்கள். அந்த பாசிச நடவடிக்கைக்கு முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்தாரா? இப்படி மத்திய அரசுடன் மோதாமல் இருப்பதுதான், ஜனநாயக இருப்பியல் வாதமா?.
இடையில், தோழர் பிரகாஷ் காரத்தின் நண்பரான பிரபாத் பட்நாயக் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அதில், ’ஆரம்பத்தில் மோடி அரசை, பாசிசம் இல்லை என்று நினைத்திருந்தோம். உண்மைதான். ஆனால்,காலப்போக்கில் அவர்களது செயல்களை பார்த்தால், பாசிசத்தை நோக்கி செல்கிறார்கள்’ என்று எழுதியிருந்தார். இது தோழர் பிரகாஷ் காரத், மனம் மாறிய மைந்தனாக ஆகிறார் என எடுத்துக் கொள்வதா? அல்லது கட்சிக்குள் பிரகாஷ் கருத்திற்கும் யெச்சூரிக்கும் மத்தியில், ஒட்டுப் போட பிரபாத் பட்நாயக் எழுதுகிறார் என்று எடுத்துக் கொள்வதா? அப்படியானால்,மோடி அரசை பாசிசம் என்று முழக்கமிடும், யெச்சூரியை ராஜ்யசபாவுக்கு அனுப்பியிருக்கலாமே?
தோழர் பினராயி விஜயன் முதல்வராக வந்த பிறகு கேரள மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த டெல்லியில் இருக்கும் இதே பிரபாத் பட்நாயக்கை பினராயி விஜயன், கேரளாவின் பொருளாதார ஆலோசகராக நியமித்தார். அதனை ஏன் தொடரவிடவில்லை? 2017ஆம் ஆண்டு பிரபாத் பட்நாயக்கை மாற்றி கீதா கோபிநாத்தை கேரளாவின் பொருளாதார ஆலோசகராக நியமித்தாரே? ஏன்? அந்த கீதா கோபிநாத்தும், அந்த பதவியை விட்டு விட்டு, ஐ.எம்.எப். என்ற, சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக போய் விட்டாரே? ஏன்?. ஐஎம்எப் அமெரிக்காவின் தாராளமய பொருளாதார கொள்கை கொண்டது என்று மார்க்சிஸ்ட் கட்சி வகுப்பு எடுக்கிறார்களே? அப்படிப்பட்ட, ஒரு நவீன தாராளமயவாத கீதா கோபிநாத்தை, முதல்வர் பினராய் விஜயன், கேரளாவிற்கு பொருளாதார ஆலோசகராக போட்டது ஏன் ? அதுவும் இவர்கள் இன்று கூறும் ஜனநாயக இருப்பியல்வாதமா?.
ஒரு செயலை செய்து விட்டு அதன் தவறை மறைப்பதற்கு வேறொரு மாதிரி பேசி சமாளிக்கலாம் என்று நினைத்தால் அதுவும் வழக்கமாக பேசும் பாணியில், தத்துவ வார்த்தைகளை பயன்படுத்தி பேசிவிட்டால், மேலும், மேலும் செய்த வேலை பகிரங்கமாகி விடும் என்பதுதானே இதன் பொருள்?
[சிபிஎம் கட்சியில் ஓரங்கட்டப்படுகிறாரா சீதாராம் யெச்சூரி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/politics/2020/03/13/18/sitharam-yechury-sideline-in-cpm-patry)�,”