பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தைத் தமிழக அரசுக்கு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையிலான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக் கழகங்களுக்குத் துணை வேந்தர்களை அரசே நியமிக்கும் வகையில் மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சட்டத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்த மசோதாவுக்கு உடனே ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்.
அவரது அறிக்கையில், “நீட் தேர்வு முறையிலிருந்து தமிழகத்திற்கு விலக்குக் கோரும் தமிழக அரசின் முயற்சிகளைத் தடுத்து தற்போது ஆளுநர் துணை வேந்தர்கள் மாநாடு நடத்துவது அப்பட்டமான அதிகார அத்துமீறலாகும்.
இதே வழிமுறையில், தமிழகம் ஒரு முகமாக நின்று, எதிர்த்து வரும் “தேசிய கல்விக் கொள்கையை” உயர்கல்வித் துறையில் அமலாக்க முயல்வது மக்களாட்சி கோட்பாட்டுக்கு எதிரானதாகும். ஆளுநர் அதிகார வரம்பின் எல்லை தாண்டி, கட்சி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்க முடியாது என்ற நிலையில் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தைத் தமிழக அரசுக்கு வழங்கும் மசோதாவைச் சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தி, ஒரு மனதாக நிறைவேற்றி இருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.
சட்டப் பேரவை நிறைவேற்றிய துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான மசோதாவிற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
**-பிரியா**