�அறைகள், ப்ளக் பாயின்ட்: கவுன்ட்டிங் சென்டர் அருகே கன்டெய்னர்- நடந்தது என்ன?

Published On:

| By Balaji

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்த சுமார் ஒரு மாத கால இடைவெளியில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு பற்றிய கேள்விகளும், விவாதங்களும் அதிகரித்துள்ளன.

திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவுக்கும், தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிராத சாகுவுக்கும் விரிவான கடிதம் ஒன்றை எழுதினார். இந்த கடிதத்தை சாகுவிடம் திமுக சார்பில் துணைப் பொதுச் செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் நேரில் சென்று அளித்தனர். அந்த புகாரில், “வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் நள்ளிரவுகளில் லாரிகள், கன்டெய்னர்கள் போன்ற கனரக வாகனங்கள் செல்கின்றன. இது எதற்காக? யார் அவற்றை அனுமதித்தது? வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைஃபை இணைப்பு தாராளமாக கிடைக்கிறது” என்றெல்லாம் குறிப்பிட்டு வாக்கு எண்ணிக்கை மையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தார்.

ஸ்டாலின் தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதிய இரண்டே நாளில் இன்னொரு கவுன்ட்டிங் சென்டருக்கு அருகே இன்னொரு கன்டெய்னர் வந்தது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தென்காசி மாவட்டத்துக்கு உட்பட்ட தென்காசி, ஆலங்குளம், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்… தென்காசி கொடிக்குறிச்சி யு.எஸ்.பி. பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிலும், பல்வேறு கட்சி முகவர்களின் கண்காணிப்பிலும், போலீஸாரின் பாதுகாப்பிலும் இருக்கும் இந்த வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு சுமார் 100 மீட்டர் அருகே, நேற்று நள்ளிரவு ஒரு கன்டெய்னர் வந்து நின்றது.

ஏற்கனவே வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அருகே கன்டெய்னர்கள் வந்துபோவது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…உடனே விழித்துக் கொண்ட திமுகவினர் தென்காசி நகர செயலாளர் சாதிருக்கு அதிகாலையிலேயே தகவல் கொடுத்தனர். அவர் உடனே தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளரான சிவபத்மநாதனுக்கு போன் செய்து, ‘அண்ணே…நம்ம கவுன்ட்டிங் மையத்து பக்கத்துல ஒரு கன் டெய்னர் வந்து நிக்குதாம்’என்று தகவல் கொடுக்க, உடனே, ‘நீங்கள் அங்கே போங்க. நான் கலெக்டருக்கு புகார் கொடுக்கறேன்’ என்று அவரை வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு அனுப்பியிருக்கிறார் சிவபத்மநாதன். உடனடியாக தென்காசி மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டருக்கு வாட்ஸ் அப் மூலமாக வாக்கு எண்ணிக்கை மையம் அருகே கன்டெய்னர் நிற்பது பற்றி தகவல் அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினார்.

அதற்குள் தென்காசி நகர செயலாளரும் ஸ்பாட்டுக்கு சென்றுவிட்டார். வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து இருந்து சுமார் 100 மீட்டர் தூரம் உள்ள அந்த இடம் செந்தில்நாதன் ,த/பெ மீனாட்சி நாதன், பெருமாள்புரம், திருநெல்வேலி என்பவருக்கு சொந்தமான பட்டா இடம். அங்குதான் கன்டெய்னர் நின்றது. அதில் இருந்த செல்போன் நம்பருக்கு திமுக நிர்வாகிகள் போன் செய்து, ‘என்ன கன்டெய்னர் இது? ஏன் இங்க வந்து நிக்குது?’என்று கேட்டிருக்கிறார்கள். உடனடியாக அவர்கள் தங்கள் சார்பில் சிலரை ஸ்பாட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

’இங்கே கட்டிட வேலை தொடங்கப் போறோம். அதுக்காக வர்ற இன்ஜினியர்கள் தங்குறதுக்காகதான் இந்த கன்டெய்னர் வேறு எதுவும் காரணம் இல்லை” என்று வந்தவர்கள் திமுக நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறார்கள். ஆனாலும், ‘நீங்க பூட்டைத் திறந்து காண்பிங்க. நாங்கள் உள்ளே சென்று பார்க்க வேண்டும்’ என்று திமுக நகர செயலாளர் கூற, அவர்களும் கன்டெய்னரின் பூட்டைத் திறந்தனர். நகர செயலாளர் உள்ளிட்டோர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது உள்ளே அறைகளும் மூன்று ப்ளக் பாயின்ட்டுகளும் இருந்திருக்கின்றன. இது இன்ஜினியர்கள் தங்குவதற்கான அறை என்று அவர்கள் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அதற்குள் அங்கே தென்காசி டி.எஸ்.பி.யும் வந்துவிட்டார்.

அவரும் கன்டெய்னர் கொண்டுவந்தவர்களிடம், “ நாட்ல என்ன நடந்துக்கிட்டிருக்கு? நீ பாட்டுக்கு எலக்‌ஷன் கவுன்ட்டிங் சென்டர் பக்கத்துல வந்து கன்டெய்னரை நிறுத்தி வச்சிருந்தா எல்லாரும் சந்தேகத்தோடுதான் பார்ப்பாங்க. முதல்ல இங்கேர்ந்து கொண்டுபோங்க”என்று உத்தரவிட்டார். அதன்பின் அந்த கன்டெய்னர் இன்று காலையே அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. அப்பகுதியில் வேறு வாகனங்கள் நிறுத்தாமல் தவிர்ப்பதற்காக போலீஸ் ரோந்து நியமிக்கப்பட்டுள்ளது

நம்மிடம் பேசிய திமுக மாவட்டப் பொறுப்பாளர் சிவபத்மநாதன், “எங்கள் தலைவர் தேர்தல் ஆணையத்துக்கே கடிதம் எழுதியிருக்கிறார். இந்த நிலையிலும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு சில மீட்டர் தொலைவில் இதுபோன்ற கன்டெய்னர்கள் வந்து நிற்பது தொடர்கதையாகிவருகிறது. தென்காசி வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு அருகே ஏப்ரல் 17 ஆம் தேதி நள்ளிரவுக்குப் பின் வந்த கன்டெய்னரை திமுகவினரின் விழிப்பான கண்காணிப்பு காரணமாக அப்புறப்படுத்தியிருக்கிறோம். கன்டெய்னருக்குள் கட்டுமான இன் ஜினியர்கள் தங்கப் போவதாக அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் உடனடியாக மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வைத்திருக்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக நானும், தென்காசி வேட்பாளர் பழனிநாடார் உள்ளிட்டோரும் பிற்பகல் கலெக்டரை சந்திக்க இருக்கிறோம். எங்கள் தலைவரின் உத்தரவுப்படி மே 2 ஆம் தேதி வரை கண்காணிப்புப் பணியை தொடருவோம் ” என்று கூறினார்.

**-ராகவேந்திரா ஆரா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share