பஞ்சாப் சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் சரன்ஜித் சிங்கை அறிவித்திருக்கிறார் ராகுல் காந்தி.
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி இன்று (பிப்ரவரி 6) காணொளி பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி…
“இது பஞ்சாபின் முடிவு. இது ராகுல் காந்தியின் முடிவல்ல. பஞ்சாப் மாநில காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் யார் என்று நீங்கள் என்னிடம் கேட்டபோது நான் இதே கேள்வியை பஞ்சாப் மக்களிடம் கேட்டேன்… பஞ்சாபில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் கேட்டேன், காங்கிரஸ் தொண்டர்களிடம் கேட்டேன், பஞ்சாப் இளைஞர்களிடம் கேட்டேன்.
அவர்கள் அத்தனை பேரும் என்னிடம் சொன்ன முடிவைத்தான் இன்று நான் உங்களிடம் சொல்லி இருக்கிறேன். என்னுடைய கருத்தை விட பஞ்சாபின் கருத்து முக்கியமானது.
பஞ்சாப் மக்கள் தங்களுடைய முதல்வர் ஓர் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர் ஆக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள்.
உண்மையிலேயே பஞ்சாப் காங்கிரஸ் கட்சிக்கு முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது கடினமாக இருந்தது. அதை மக்கள் எளிதாக்கி விட்டார்கள். அதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் பஞ்சாப் காங்கிரஸின் முதலமைச்சர் வேட்பாளர் தற்போதைய முதல்வராக இருக்கும் சரன்ஜித் சிங் சன்னி” என்று அறிவித்தார் ராகுல் காந்தி.
**வேந்தன்**