புலவர் குடும்பத்துக்கு சசிகலா கொடுத்த வாக்கு!

Published On:

| By Balaji

தமிழ்நாடு அரசின் முன்னாள் அரசவைக் கவிஞரும், அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவருமான புலவர் புலமைப்பித்தன் உடல்நலக் குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் நேற்று (செப்டம்பர் 7) மருத்துவமனைக்கு சென்று உடல் நலம் விசாரித்தார் சசிகலா.

வயது முதிர்வால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னை அடையாரில் உள்ள மலர் மருத்துவமனையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார் புலமைப்பித்தன்.

மூன்றாவது மாடியில் ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புலமைப்பித்தனைச் சந்திக்க செப்டம்பர் 7ஆம் தேதி மதியம் 1.25 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த சசிகலா, புலமைப்பித்தனைச் சந்தித்தும் அவரது குடும்பத்தினர்களிடம் நலம் விசாரித்தவர், “பெரியவருக்கு உதவி செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன். மருத்துவமனை பில் நான் செலுத்தச்சொல்கிறேன். வேறு ஏதாவது தேவை என்றால் கேளுங்கள்” என்று 20 நிமிடங்கள் பேசிவிட்டு 1.45 மணிக்கு மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார். .

வெளியில் காத்திருந்த பத்திரிகையாளர்களிடம் பேசிய சசிகலா, “மறைந்த முதல்வர் எம்ஜிஆர் இருந்தபோது சட்ட மேலவைத் துணைத் தலைவர், அரசவை கவிஞர் எனப் பதவிகளைக் கொடுத்து புலவருக்கு அழகு பார்த்தார். அம்மா ஆட்சிக்காலத்தில் சுற்றுலா வளர்ச்சி கழகத் தலைவராகவும் அதிமுகவின் அவை தலைவராகவும் பதவி வகித்த புலமைப்பித்தனையும் அதிமுகவையும் பிரித்து பார்க்க முடியாது.

தமிழ்த் திரைப்படங்களில் நிறைய பாடல்களை எழுதியுள்ளவர், எம்ஜிஆர் நடித்த இதயக்கனி படத்தில் நீங்கள் நல்லாயிருக்கனும் நாடு முன்னேற என்ற பாடலை எழுதியவர் பட்டித்தொட்டியெல்லாம் அதிமுகவைக் கொண்டு சென்றவர்” என்று புகழ்ந்தார்.

”ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் தலைமையை சசிகலாவே ஏற்க வேண்டும். அதே நேரம் அவர் தனது குடும்பத்தினரின் ஆதிக்கத்தை கட்சிக்குள் கொண்டுவராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று புதிய கருத்தைச் சொன்னவர் புலவர் புலமைப்பித்தன் என்பது குறிப்பிடத் தக்கது.

**-வணங்காமுடி**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel