திமுக எம்.எல்.ஏ.வும் ராஜினாமா- விழும் புதுச்சேரி அரசு!

Published On:

| By Balaji

புதுச்சேரியில் ஒவ்வொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக ராஜினாமா செய்தது போக, இன்று (பிப்ரவரி 21) திமுக எம்.எல்.ஏ. ஒருவரும் ராஜினாமா செய்து காங்கிரஸ் அரசின் கவிழ்ப்பை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

பிப்ரவரி 22 ஆம் தேதி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தனது பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டுமென்று பொறுப்பு துணை நிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து ராஜினாமா செய்துகொண்டே இருக்கின்றனர். இதுவரை காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஒருவர் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆக ஐந்து எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் இழந்துள்ளது.

இந்த நிலையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் வீட்டுக்குச் சென்று ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். அவர் அங்கிருந்து புறப்பட்ட பத்து நிமிடங்களில் தட்டாஞ்சாவடி திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன் சபாநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தையும் கொடுத்தார். இவருக்குப் பின்னால் அண்மையில் பாஜகவுக்கு சென்ற நமசிவாயம் இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

இதன் மூலம் புதுச்சேரி சட்டமன்றத்தில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 26 ஆகக் குறைந்துள்ளது. ஏற்கனவே பாஜகவின் நியமன உறுப்பினர்களையும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களாக தமிழிசை கருதுவதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் நியமன உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யுமாறு முதல்வர் அழுத்தம் கொடுக்கலாம் என்கிறார்கள்.

அது ஒருபக்கம் என்றாலும் இப்போது வரை காங்கிரஸின் பலம் சபையில் 12 ஆக இருக்கிறது. இதனால் புதுச்சேரி காங்கிரஸ் அரசு கிட்டத்தட்ட கழன்று விழுந்துவிட்டது என்பதே நிலைமை!

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share