புதுச்சேரியில் எப்படியும் ஆட்சியமைப்பது என பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளும் முனைப்பில் இருக்கின்றன.
குறிப்பாக பாஜக, முதல் கட்டமாக சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுத்து, காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்தது. அதையடுத்து காங்கிரசிலிருந்து தங்கள் பக்கம் தாவிய நமச்சிவாயத்தை முதலமைச்சர் நாற்காலியில் அமரவைப்பது, அதற்காக அதிமுக, ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது என கன ஜோராக காரியத்தில் இறங்கியது.
பாஜகவின் இந்த அதீத பாய்ச்சலுக்கு வேகத்தடை போட்டார், என்.ஆர். காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ரங்கசாமி. மூன்று முறை முதலமைச்சராக இருந்தவரை ஓரங்கட்டிவிட்டு, அவருடைய உறவினரான நமச்சிவாயத்தை அந்த இடத்தில் உட்காரவைத்தால், ரங்கசாமி சமாதானம் ஆகிவிடுவார் என கணக்குப்போட்டது, பாஜக. ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்லாமலே ரங்கசாமியிடம் டீலிங் செய்தது.
சங்கதியை அறிந்துகொண்ட ரங்கசாமி, சட்டென தன்னுடைய ஒரிஜினல் முகத்தைக் காட்டினார். நேருக்கு நேராகவே தன்னிடம் பேசிய பாஜக தலைவர்களிடம் தான் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை கறாராக சொல்லிவிட்டார். சமாதான முயற்சிகள் பலனளிக்காததை அடுத்து அதற்கு பாஜக தாமதமாக ஒப்புக்கொண்டது. அதற்குள் ரங்கசாமிக்கு கிராக்கி ஆகிவிட்டது.
பாஜக பக்கம் தாவத் தயாராக இருந்தவர்கள், ரங்கசாமி பக்கம் திரும்பினார்கள். நேற்று (மார்ச் 7) இரவு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ஏ.கே.டி. ஆறுமுகம் ரங்கசாமியைச் சந்தித்து, என்.ஆர்.காங்கிரசில் இணைந்துவிட்டார். இரண்டு நாள்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ரமேஷ் ரங்கசாமியுடன் இணைந்தார். மேலும் காரைக்கால் பகுதியில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் இணைப்புக்காகக் காத்திருக்கிறார்.
மௌனம் காத்துவந்த ரங்கசாமி, தனித்தனியாகப் போட்டியிடுவோம்; தேர்தலுக்குப் பிறகு கூட்டணி பற்றிப் பேசுவோம் என தவிர்க்கிறார். பாஸ்கர், அன்பழகன் ஆகிய அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களும், பாஜகவுடன் கூட்டணிவைத்துப் போட்டியிட்டால், தங்களின் தொகுதிகளில் சிறுபான்மையினர் வாக்குகளை இழக்க நேரிடலாம் என கட்சி மாற யோசனை செய்துவருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இதே நிலைமை நீடித்தால் பாஜக தனியாகத்தான் போட்டியிடவேண்டும் என்கிறார்கள், புதுவை அரசியல் நோக்கர்கள். காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜக பக்கம் போனவர்களும் இப்போது ரங்கசாமி பக்கம் திரும்பிச் செல்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தொகுதிகள், மாஹியும் ஏனாமும்தான். காங்கிரசிலிருந்து லட்சுமிநாராயணன், மல்லாடி கிருஷ்ணாராவ், வல்சராஜ், பொதுச்செயலாளர் ரமேஷ், செயல்தலைவர் ஆறுமுகம் ஆகியோர் என்.ஆர். காங்கிரசுக்குத் தாவிவிட்டனர். இவர்களை எல்லாம் தன்னால் கட்சியில் தக்கவைக்க முடியவில்லை என காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியம், தன்னுடைய பதவியிலிருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் 7ஆம் தேதி முதலமைச்சர் பதவியிலிருந்து அண்மையில் விலகிய நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், ஏவிசுப்ரமணியன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி ஆகியோர் திமுகவுக்கு கூட்டணிக்காக அழைப்புவிடுத்தனர்.
அதன்படி அவர்களைச் சந்தித்தார்கள், திமுகவின் மாநிலச் செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர் சிவா, எஸ். கே. சிவக்குமார். சந்திப்பின்போது சிவா பேசுகையில், காங்கிரசில் இப்போது ஆள்கள் இல்லை; எல்லாரும் பாஜகவுக்கும், என்.ஆர்.காங்கிரசுக்கும் போய்விட்டார்கள்; நீங்கள் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துவிடுங்கள்; நாங்கள் 10 தொகுதிகள் தருகிறோம்; விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சியினருக்கும் சேர்த்து 20 தொகுதிகள் எனக் கூற, நாராயணசாமி கோபமாகி, இது வேலைக்கு ஆகாது; ஸ்டாலினிடம் பேசிவிட்டு வருகிறேன் என கூட்டத்தை முடித்துவிட்டார்கள். இப்படி, இரண்டு பெரும் தேசிய கட்சிகளும் சிறிய மாநிலமான புதுச்சேரியில் தனித்துவிடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
– வணங்காமுடி
�,