நாஞ்சில் சம்பத்: புதுச்சேரி போலீஸ் போட்ட தப்புக் கணக்கு!

politics

நாஞ்சில் சம்பத்தை புதுச்சேரி காவல் துறையினர் கைது செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து நாஞ்சில் சம்பத் பிரச்சாரம் மேற்கொண்டார். தவளக்குப்பம் பகுதியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய நாஞ்சில் சம்பத், “புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி ஆணா அல்லது பெண்ணா என்று தெரியவில்லை’ என்று விமர்சித்திருந்தார். நாஞ்சில் சம்பத்தின் பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக துணை நிலை ஆளுநரின் சார்பு செயலாளர் சுந்தரேசன், அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், பெண்களை பொது இடங்களில் அவதூறாக பேசுதல், அநாகரீகமான வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நாஞ்சில் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மார்ச் 21ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென நாஞ்சில் சம்பத்துக்கு சில நாட்களுக்கு முன்பு சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் இன்று (மார்ச் 19) காலை 6.30க்கு கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளை பகுதியிலுள்ள நாஞ்சில் சம்பத் வீட்டுக்கு புதுச்சேரி காவல்துறையினர் வந்தனர். அவர்களோடு லோக்கல் போலீஸான திருவட்டார் காவல்நிலையத்தைச் சேர்ந்த இருவரும் வந்தனர். புதுச்சேரி துணை நிலை ஆளுநரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்ய வந்திருப்பதாக சொன்னதும், நாஞ்சில் சம்பத் கோபம் அடைந்தார்.

’என்னை வரும் 21 ஆம் தேதி ஆஜராக சொல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருக்கிறது. அதற்கு முன்னதாகவே எதற்கு கைது செய்ய வருகிறீர்கள்? கைது செய்ய யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது?’ என்று நாஞ்சில் சம்பத் ஆவேசமாகக் கேட்க, தகவல் கிடைத்து நாஞ்சில் சம்பத்துக்கு ஆதரவாக வழக்கறிஞர்களும், உள்ளூர் மக்களும் வீட்டுக்கு வந்துவிட்டனர். இன்று காலை 11.30 வரை நாஞ்சில் சம்பத்துக்கும் புதுச்சேரி போலீஸாருக்கும் இடையில் வாக்குவாதம் நடந்தது.

நாஞ்சில் சம்பத்தின் வழக்கறிஞர்கள் குமரி மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத்தைத் தொடர்புகொண்டு, புதுச்சேரி போலீஸாரின் உள்நோக்கத்தைத் தெரிவித்தனர். குமரி மாவட்ட போலீஸார் புதுச்சேரி போலீஸாரோடு பேசி நாஞ்சில் சம்பத்தை கைது செய்யவிடாமல் தடுத்தனர்.

இந்த வழக்கில் 21 ஆம் தேதி ஆஜராவதாக எழுதிக்கொடுக்கும்படி நாஞ்சில் சம்பத்திடம் அதிகாரிகள் வலியுறுத்தினர். நாஞ்சில் சம்பத் எழுதிக்கொடுத்ததை அடுத்து அவரைக் கைது செய்ய முடியாமல் புதுச்சேரி போலீஸார் திரும்பினர்.

நாஞ்சில் சம்பத் அதிமுகவில் சேர்ந்தபோது அவர் மீது மேடைப் பேச்சுகளுக்காக மட்டும் சுமார் 80 வழக்குகள் இருந்தன. அவை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் திரும்பப் பெறப்பட்டன. அதன் பின் வழக்குகள் ஏதுமின்றி இருந்த நாஞ்சில் சம்பத் மீது புதுச்சேரியில் வழக்குத் தொடரப்பட்டது. இப்போது நாஞ்சில் சம்பத் எந்தக் கட்சியிலும் இல்லை. திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். மற்றபடி கோயில் விழாக்கள், இலக்கிய விழாக்களில்தான் அதிகம் கலந்துகொள்கிறார். எனவே யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் எளிதில் கைது செய்துவிடலாம் என்று கணக்குப் போட்டு வந்தனர் புதுச்சேரி போலீஸார். ஆனால் அவர்களின் கணக்குத் தவறிவிட்டது.

நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய புதுச்சேரியில் இருந்து குமரி வரும் பேருந்தில் ஏறி வந்திருக்கிறார்கள் அம்மாநில போலீசார்.புதுச்சேரிக்கு அடுத்த பேருந்து மாலை 5 மணிக்குதான் என்பதால் சம்பத்தையும் கைது செய்யமுடியாமல் பஸ்ஸும் கிடைக்காமல் குமரியிலேயே காத்திருக்கிறார்கள்.

**எழில்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.