புதுச்சேரி மாநிலத்தில் திமுக நேற்று நடத்திய செயல்வீரர்கள் கூட்டம், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்கிறார்கள் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸுடன் கூட்டணியிலிருந்த திமுக, திடீரென்று புதுச்சேரியில் காங்கிரஸ் இல்லாமல், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை அமைக்க, இதுவரையில் யாரும் நடத்தாத அளவுக்கு பிரம்மாண்டமான நிர்வாகிகள் கூட்டத்தை புதுச்சேரியிலும், காரைக்காலிலும் நடத்தியிருக்கிறது.
இனி புதுச்சேரியில் திமுக தலைமையிலான ஆட்சி, முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்தான் என்று உண்ர்வுபூர்வமாக அறிவித்துள்ளார்கள் நிர்வாகிகள்.
ஜனவரி 18ஆம் தேதி, புதுச்சேரி சுகன்யா திருமண மண்டபத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள, புதுச்சேரியில் உள்ள 25 சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா ஒரு தொகுதிக்கு 100 இருசக்கர வாகனங்கள் வரவேண்டும் என்று உத்தரவு போட்டிருந்தார்கள் திமுக அமைப்பாளர்கள். அதுபோலவே சுமார் 2500 இருசக்கர வாகனங்களில் ஐந்தாயிரம் பேர் குவிந்தனர். அதில்லாமல் மாற்றுக் கட்சியிலிருந்து திமுகவுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் பலர் தங்களது ஆதரவாளர்களை அனுப்பி வைத்திருந்தார்கள்.
உதாரணமாக என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவாளர் முன்னாள் அமைச்சருமான கல்யாணசுந்தரம் ஆதரவாளர்கள், புதுச்சேரி வன்னியர் பாதுகாப்பு பேரியக்கத் தலைவர் தட்டாஞ்சாவடி செந்தில் ஆதரவாளர்கள், கலாம் சேவை மையத்தின் சம்பத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்துகொண்டார்கள்.
புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளரும் அரக்கோணம் எம்.பி,யும், புதுச்சேரி மாநிலத்தின் திமுக முதல்வர் வேட்பாளராக கருதப்படுபவருமான ஜெகத்ரட்சகன், பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மதியம் 12.35 மணிக்கு மலர்மாலை அணிவித்து வணங்கிவிட்டு, சரியாக 1.15 மணிக்கு செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்ற சுகன்யா திருமணம் மண்டபத்துக்குள் மக்கள் கூட்டத்தில் நீந்திக்கொண்டு வந்தார்
தெற்கு மாநில அமைப்பாளரும் எம்.எல்.ஏ.வுமான சிவா பேசும்போது,
“புதுச்சேரி சரித்திரத்தை மாற்றி அமைக்க வந்திருக்கிறார் அண்ணன் ஜெகத். நிர்வாகிகள் நீங்கள் காலையிலிருந்து காத்திருந்து முகம் சோர்வைடைந்தீர்கள். ஆனால், ஐயா முகத்தைப் பார்த்ததும் மலர்ந்துபோயுள்ளீர்கள். புதுச்சேரி அரசியலும் ஆட்சியும் மோசமாகவுள்ளது நமது கட்சிக்கு ஆட்சி செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று திமுக தலைவரிடம் சொல்லியபோது, ’முதலில் நீங்கள் மூன்று அமைப்பாளரும் ஒற்றுமையாக வாங்கய்யா பார்ப்போம்’ என்றார் கோபமாக. அதன் பிறகு நான் (சிவா) வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், காரைக்கால் மாநில அமைப்பாளர் நாஜிம் மூன்று பேரும் ஒன்றுசேர்ந்து சென்னை அறிவாலயத்துக்கு சென்றோம். தலைவர் பார்த்து மகிழ்ச்சி என்றார்.
அப்போதுதான் புதுச்சேரியில் திமுக தலைமையில் ஆட்சி அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதன் பிறகு புதுச்சேரி நிர்வாகிகளை அழைத்து மூன்றரை மணி நேரம் ஒதுக்கி அவரவர் கருத்துக்களைக் கேட்டு ஒப்புதல் கொடுத்தவர், அன்றிலிருந்து இன்று வரையில் ஒரு நாளைக்கு நான்குமுறை தொடர்புகொண்டு கட்சி நிலவரத்தைப் பற்றியும் புதுச்சேரி அரசியல் சூழ்நிலையைப் பற்றியும் கேட்டறிந்து வருகிறார்.
இப்போது நடக்கும் ஆட்சியில் தொழிற்சாலைகள் மூடி கிடக்கிறது. கார்ப்பரேஷன் காலியாகிவருகிறது, வேலை வாய்ப்புகள் இல்லை, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது” என்று குறிப்பிட்டார்.
புதுச்சேரி திமுக வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் பேசும்போது, “மில்கள் இயங்கவில்லை. இரண்டு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் இல்லை. இருக்க இடம் இல்லை. வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த நிலை போக்க திமுக தலைமையிலான ஆட்சி அமையவேண்டும்.
புதுச்சேரியில் திமுக ஆட்சியை அமைக்கத் தலைவர் ஸ்டாலினைச் சந்திக்க நாஜிம் சிவா, நான் (சிவக்குமார்) மூவரும் ஒன்றாகப் போயிருந்தோம், எங்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியளிக்கிறது இந்த ஒற்றுமை தேர்தல் பிறகும் நீடிக்குமா, ஒற்றுமையா இருப்பீர்களா என்று கேட்டார் தலைவர். அப்போது சிவா கொஞ்சம் கஷ்டப்பட்டு ஒப்புக்கிட்டார். அன்று முதல் நான் சிவாவை விடுவதே இல்லை. எந்த நேரமும் சிவா.. சிவா என்றுதான் கூப்பிட்டுகிட்டு இருப்பேன்.
ஐயா ஜெகத்ரட்சகன் முதல்வர் பொறுப்பு ஏற்றதும் மக்களுக்கு உடம்பு சரியில்லை என்றால் தரமாக மருத்துவம் கொடுப்பார். அப்போது நான் சுகாதாரத்துறை அமைச்சராகவிருப்பேன், சிவாவுக்குக் கலால் துறை அமைச்சர்” என்று அமைச்சரவைப் பட்டியலையே வாசித்தவர்,
“ஜெகத்ரட்சகன் அவர்கள் முதல்வர் பதவி ஏற்றதும் இரண்டு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கொடுப்பார். அரசாங்கத்தில் கொடுக்கமுடியாவிட்டாலும் ஒரு தொழிற்சாலையை உருவாகி வேலை வாய்ப்புகள் கொடுப்பார் இது சத்தியம்.
இன்று செயல் வீரர்கள் கூட்டம் நடக்கும் நிலையில் அவசரமாகச் சட்டமன்றத்தைக் கூட்டியுள்ளார் முதல்வர் நாராயணசாமி. காரணம் இந்த செய்தியை மறைத்து சட்டமன்றச் செய்தியை முன்னிறுத்தத்தான். ஆனால் திமுக செயற்குழு செய்திகள் பிச்சுகிட்டு போகிறது பத்திரிகைகளில். ஜெகத்ரட்சகன் முதல்வர் பதவி ஏற்பார். தொழிற்சாலைகளைத் துவங்குவார். வேலை வாய்ப்புகளைக் கொடுப்பார். புதுச்சேரி மாநில பட்ஜெட்டை விட அவரது (ஜெகத்) பட்ஜெட் மிகப்பெரியது. 2021 மே 14 அன்று திமுக ஆட்சி அமைக்கும் முதல்வராக ஜெகத்ரட்சகன் பொறுப்பேற்பார் என அடித்து சொல்கிறேன். அன்றுதான் நான் பிறந்த நாள்” என்று ஆரவாரத்துக்கிடையே பேசினார்.
நிறைவுரையாக பேசிய புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் அனைவரையும் கட்டிப் போட்டுவிட்டார்.
“நான் தாய் மடியில் பிறந்து தாய் விரலை பிடித்து விளையாடிய மண் இந்த மண். இந்த மண்ணைப் பார்த்ததில் மகிழ்ச்சி அளிக்கிறது. என் அருமை சொந்தங்களே…கறுப்பு சிவப்பு கொடி உழைக்கும் மக்களின் கொடி. நமது தலைவர் கலைஞர் செம்மொழிக்காக பாடுபட்டவர், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கிக் கொடுத்தவர்.
அவரது வழியில் தலைவர் தளபதி அவர்கள் என்னை, ‘புதுச்சேரிக்கு சென்று வாருங்கள்’ என்று வழியனுப்பி வைத்துள்ளார். நான் புதுச்சேரிக்கு தலைவரின் தூதுவராக வந்துள்ளேன். இந்த எழுச்சி ஆட்சி மாற்றத்துக்கான எழுச்சியாக இருக்கிறது. இந்த எழுச்சியை தலைவரிடம் தெரிவிப்பேன்.
நான் இந்த ஊர்க்காரன். இப்போது இந்த ஊரின் நிலையைப் பார்த்தால் என் வயிறு எரிகிறது. இங்கே எத்தனை ஆலைகள் மூடிக் கிடக்கிறது? இதனால் எத்தனை குடும்பங்கள் வேலையில்லாமல் வாடுகின்றனர்? இவர்கள் என்ன திட்டம் வைத்துள்ளார்கள்?
எனது கனவு புதுச்சேரி மாநில மக்கள் நன்றாக இருக்க வேண்டும். புதுச்சேரியில் முதலீடு செய்ய இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து பல பேர் காத்திருக்கிறார்கள். புதுச்சேரியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்காக, அந்த முதலீடு செய்யும் முதலாளிகளின் காலில் விழக் கூட தயங்க மாட்டேன். இதில் என்ன மரியாதைக் குறைவு இருக்கிறது.நான் உங்கள் வீட்டுப் பிள்ளை… உங்களில் ஒருவன்.
திமுக தலைமையிலான கூட்டணியே இங்கே வெல்லும். திமுக தலைமையிலான கூட்டணியில் யார் யார் இருப்பார்கள் என்பதை அங்கே இருக்கும் அறிவாலயத்துக்கு பகவான் நம் தலைவர் முடிவு செய்வார். தூய்மையான ஒரு ஆட்சியை, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் ஆட்சியை நாம் புதுச்சேரி மக்களுக்குக் கொடுப்போம். உங்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். முப்பது இடங்களும் நாம் வெற்றிபெற வேண்டும்” என்று உரையாற்றி முடித்தார்.
அரங்கம் நிறைந்து சாலை வரை வழிந்த தொண்டர்கள் அனைவருக்கும் மதியம் பிரியாணி விருந்து பரிமாறப்பட்டது. மனதும் வயிறும் நிறைந்து திமுக தொண்டர்கள் உற்சாகமாக புறப்பட்டனர்.
புதுச்சேரியில் உரையாற்றிவிட்டு காரைக்காலில் சபிரா மஹாலில் ஏற்பாடுகள் செய்துள்ள செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றார் ஜெகத்ரட்சகன். அவருடன் எஸ்.பி.சிவக்குமார், சிவா எம்.எல்.ஏ இருவரும் சென்றார்கள்.
காரைக்கால் எல்லை துவக்கமான களத்தூரில் ஜெகத்ரட்சகனுக்கு வரவேற்புகள் கொடுத்து ஆயிரம் பைக்குக்கள் அணிவகுக்க அழைத்துச் சென்றார் அமைப்பாளர் நாஜிம்.
மண்டபம் நிறைந்திருந்தது, புதுச்சேரி வன்னியர் பாதுகாப்பு பேரியக்கத்தின் தலைவர் தட்டாஞ்சாவடி செந்தில் தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜெகத்துக்கு பொன்னாடை போர்த்தி திமுகவில் இணைத்துக்கொண்டார்கள்.
காரைக்கால் மாநில அமைப்பாளர் நாஜிம் பேசும்போது, “22 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைக்கப் பொறுப்பாளராக வந்துள்ளார் ஜெகத்ரட்சகன். செயல் வீரர்கள் நீங்கள் கடுமையாக உழைத்து வெற்றியைக் கொடுக்கவேண்டும்” என்றார்.
எஸ்.பி.சிவக்குமார் பேசும்போது, “முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்தான். இனி திமுக ஆட்சிதான். கடந்த தேர்தலில் காங்கிரஸ் நமக்கு துரோகம் செய்துவிட்டது. நமக்குத் தொகுதிகள் ஒதுக்கிய இடத்தில் திட்டமிட்டு காங்கிரஸ்காரர்கள் சுயேச்சையாக வேட்பாளர்களை நிறுத்தித் தோற்கடித்தார்கள். அப்படிப்பட்ட காங்கிரசுக்கு இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம்” என்றார்.
ஜெகத்ரட்சகன் பேசும்போது, “நான் தேர்தல் பொறுப்பாளர் மட்டும்தான். முதல்வர் வேட்பாளர் யார் என்று கட்சி தலைவர்தான் முடிவுசெய்வார்” என்று கடமை கண்ணியம் கட்டுப்பாடுடன் பேசியவர், “இந்தப் பகுதி கடற்கரை அருகில் உள்ளது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும் அளவுக்குத் தொழிற்சாலைகளைக் கொண்டுவருவதற்கு ஏற்பாடுகள் செய்கிறேன். திமுக ஆட்சி அமைய அனைவரும் பாடுபடுங்கள் நாளை நமதே” என்றார்.
புதுச்சேரி திமுகவுக்கு ஜெகத்ரட்சகன் மூலம் புதுரத்தம் பாய்ச்சப்பட்டிருப்பதை நேற்று கண்கூடாக காண முடிந்தது.
**-எம்.பி.காசி**
�,”