புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதை அடுத்து, அந்தக் கட்சிக்குள் இருந்த அதிருப்தியைச் சமாளிக்கும் முயற்சி நடந்துவருகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைமையிடம் சொல்லி, பலருக்கும் புதிய பதவிகளை வழங்க வைத்தார், நாராயணசாமி. நேற்றுமுன்தினம் புதிய பதவி நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டது.
****
அதன்படி, மாகி தொகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வல்சராஜ், துணைத்தலைவராக ஆக்கப்பட்டுள்ளார்.
கதிர்காமம் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட கே.எஸ்.ரமேஷ். இவருக்கு பொதுச்செயலாளர் பதவியை வாங்கித்தந்தார், நாராயணசாமி.
இவர்கள் இருவரும் முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு தாவிவிட்டனர். ஆம், காங்கிரஸ் கட்சிக்குள் புதிய பதவி கிடைத்த ஒரு நாளில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், ஏனாம் தொகுதியைச் சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சியிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகிய அவர், இப்போது என்.ஆர். காங்கிரசுடன் கைகோர்த்திருக்கிறார். அங்கு தேர்தலில் போட்டியிடும் மூன்று பேரின் செலவையும் கவனித்துக்கொள்வதாக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் என்கிறார்கள் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள்.
இன்னொருவர், ஏ.கே.டி. ஆறுமுகம். இவரோ என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி போட்டியிடும் இந்திரா நகர் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடுவார். இரண்டு பேருமே ஒரே சாதி( வன்னியர்) பின்னணியைக் கொண்டவர்கள். அதிருப்தியில் இருந்த ஆறுமுகத்துக்கு புதுவை காங்கிரஸ் செயல்தலைவர் பதவியை கிடைக்கும்படி செய்தும், நாராயணசாமியால் அவரை கட்சியிலேயே தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.
ரங்கசாமியின் மருமகன் நமச்சிவாயம் பாஜகவுக்குத் தாவியதை அடுத்து, அவருடைய இடத்தில் ஆறுமுகத்தைக் கொண்டுவர ரங்கசாமி வலைவீசிவருகிறார். இன்னொரு பக்கம் பாஜக தரப்பிலிருந்து ஆறுமுகத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஒரே சமயத்தில் இரண்டு தரப்பிலிருந்து வரும் அழைப்புகளால் முடிவெடுக்க முடியாமல் தடுமாற்றத்தில் இருக்கிறார் ஆறுமுகம்.
காங்கிரஸ் கட்சியிலிருந்துதான் என்றில்லை, அதன் கூட்டணிக் கட்சியான திமுகவிலிருந்தும் ஒரு புள்ளி எதிரணிக்குப் போய்விட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவில் வாய்ப்பு கேட்ட தட்டாஞ்சாவடி செந்தில், இடம் கிடைக்காததால், வன்னியர் பாதுகாப்பு பேரியக்கம் என தனி ஆவர்த்தனம் செய்ய ஆரம்பித்தார். மீண்டும் அண்மையில் ஜெகத்ரட்சகன் தலைமையில் புதுவை திமுகவை புத்துயிரூட்ட முயற்சி நடந்தபோது, மறுபடியும் திமுகவில் சேர்ந்தார். இந்த முறையும் திமுகவில் போட்டியிட வாய்ப்பு கேட்டவர், என்ன நினைத்தாரோ என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார்.
புதுச்சேரியில் கூட்டணிகள் உறுதியாவதற்குள் அணி தாவலைவிட கட்சித்தாவலே அதிகரித்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
**- வணங்காமுடி**
�,”