புதுச்சேரி அரசியலில் பரபரப்பான நிகழ்வாக இன்று (பிப்ரவரி 22) காலை சட்டமன்றம் கூடியது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து ராஜினாமா செய்ததால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அடுத்து முதல்வர் நாராயணசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு சட்டமன்றம் கூடியதும் சபாநாயகர் சிவக்கொழுந்து பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வர் நாராயணசாமிக்கு உத்தரவிட்டார்.
தனது அரசுக்கு நம்பிக்கைத் தீர்மானத்தைக்கொண்டு வந்து உரையாற்றிய முதல்வர் நாராயணசாமி,
“இன்னும் இருப்பது ஐந்து நாளோ,பத்து நாளோ. ஆனாலும் எதிர்க்கட்சிகள் சில ஆண்டுகளாகவே இந்த ஆட்சியை கவிழ்க்க தொடர்ந்து முயன்றார்கள்.
கடந்த ஆட்சிக்காலத்திலே விட்டுவிட்டுச் சென்ற நிறைவேற்றாமல் சென்ற திட்டங்களை எல்லாம் இந்த ஆட்சியில் நிறைவேற்றினோம். நாங்களாகவே பல்வேறு திட்டங்களையும் நிறைவேற்றியிருக்கிறோம். பல கோயில்களில் கும்பாபிஷேகம் செய்திருக்கிறோம்.
மத்திய அரசு, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து செய்த சதியை எல்லாம் கடந்து இந்த ஆட்சி இத்தனை ஆண்டு காலம் நடந்திருக்கிறது. கொரோனா காலத்தில் அரசுப் பணிகள், அமைச்சர்களின் பணிகள் உயிரைப் பணயம் வைத்து களத்தில் இறங்கி பாடுபட்டனர். ஆனால் சிலர் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்தனர். அவர்கள் யார் என்று புதுச்சேரி மக்களுக்குத் தெரியும்.
எவ்வளவு இக்கட்டு வந்தாலும் எவ்வளவு தடைகள் வந்தாலும் மக்களுக்காக பாடுபட்டிருக்கிறோம். எங்களது பல்வேறு நலத் திட்டக் கோப்புகள் துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் தூங்குகின்றன.
பாஜகவின் மத்திய அரசு எந்தெந்த மாநிலங்களில் எப்படியெல்லாம் மக்களாட்சியை கலைத்திருக்கிறது என்று எல்லாருக்கும் தெரியும். புதுச்சேரியிலும் இந்த ஆட்சியைக் கவிழ்க்க தொடர்ந்து சதி செய்து வந்திருக்கிறது. மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த அரசைக் கவிழ்க்க நடக்கும் சதிக்குத் துணை செய்கிறார்கள்” என்று சுமார் ஒரு மணி நேரம் முதல்வர் நாரயணசாமி பேசினார்.
மேலும் இந்த வாக்கெடுப்பில் நியமன எம்.எல்.ஏ.க்கள் மூவர் கலந்துகொள்ளக் கூடாது என்று ஆளுந்தரப்பில் கூற இது தொடர்பாக எதிர்க்கட்சியினர் மறுப்பு தெரிவித்தனர்.
இந்த அமளியைத் தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி, அவருடன் அமைச்சர்கள், திமுக உறுப்பினர்கள் 12 பேர் வெளிநடப்பு செய்தனர்.
இதன் பின் சபாநாயகர் சிவக்கொழுந்து, “புதுச்சேரி அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறிவிட்டது. இந்த அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது” என்று அறிவித்தார்.
இன்று பிற்பகல் 12 மணிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசையை முதல்வர் நாராயணசாமி சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கிறார் என்று புதுச்சேரியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
**-வேந்தன்**�,