சில நாட்களாக ஓய்ந்திருந்த புதுச்சேரி அரசியல் பரபரப்பு மீண்டும் தொடங்கியிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சட்டமன்ற உறுப்பினர் லக்ஷ்மிநாராயணன் பாஜகவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று (மார்ச் 3) அவர் முன்னாள் முதல்வரான என். ரங்கசாமி தலைமையிலான என் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்த லஷ்மி நாராயணனை ரங்கசாமி வரவேற்று அவருக்கு உறுப்பினர் அட்டை அளித்து கட்சியில் இணைத்துக் கொண்டார்.
அண்மையில் பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முக்கிய தலைவரான நமச்சிவாயம் என். ரங்கசாமியின் உறவினர் ஆவார். நமச்சிவாயம் பாஜகவுக்கு வந்ததிலிருந்து ரங்கசாமிக்கு பாஜக கொடுத்துவந்த முக்கியத்துவம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.
அண்மையில் புதுச்சேரிக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா காரைக்காலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது நமச்சிவாயத்தின் பெயரை உச்சரித்தார். “நமச்சிவாயம் தான் முதல்வராக வர வேண்டியவர். ஆனால் டெல்லிக்கு போய் காந்தி குடும்பத்தின் கால்களைப் பிடித்து முதல்வர் பதவியை வாங்கிவிட்டார் நாராயணசாமி” என்று அமித் ஷா பேசியிருந்தார்.
இதன் மூலம் வரும் தேர்தலில் பாஜக புதுச்சேரி முதல்வர் வேட்பாளராக நமச்சிவாயத்தை முன்னிறுத்தப் போவது கிட்டத்தட்ட உறுதியான நிலையில்… கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிப்பார்கள் என்று நினைத்த என். ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடும் அதிருப்தி அடைந்தார்.
இதையடுத்து காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு செல்பவர்களை என்.ஆர். காங்கிரசில் இருந்து பேசி தங்கள் பக்கம் வருமாறு அழைப்பு விடுத்து கொண்டிருக்கிறார்கள். இதன் ஒரு வெளிப்பாடாகத்தான் லக்ஷ்மி நாராயணன் காங்கிரசில் இணைந்திருக்கிறார் என்கிறார்கள் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில்.
ஏற்கனவே பிப்ரவரி 23ஆம் தேதி [நமச்சிவாயம் Vs ரங்கசாமி புதுச்சேரியில் அடுத்த ஆட்டம் ஆரம்பம்](https://minnambalam.com/politics/2021/02/23/25/namachivayam-vs-rengasamy-puduchery-next-political-game-start) என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் காட்சிகள் இப்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன..
இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்குள், “ரங்கசாமியை மீண்டும் காங்கிரசுக்கு அழைப்பது அல்லது காங்கிரஸ்- என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அமைப்பது” போன்ற ஆலோசனைகள் தொடங்கியுள்ளன.
**-வேந்தன்**
�,