பிடிஆர்-நிர்மலா: மோதல்களுக்கு இடையே ஒரு பூங்கொத்து!

politics

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் மாநில நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜனும் நேற்று (செப்டம்பர் 30) சென்னையில் சந்தித்தனர்.

தமிழ்நாடு, தெலங்கானா மாநிலங்களில் நிதித்துறை ரீதியான இரு நாள் சுற்றுப் பயணமாக நேற்று சென்னை வந்தார் நிர்மலா சீதாராமன். மத்திய மறைமுக மற்றும் நேரடி வரிகள் வாரிய அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைகள் மேற்கொண்ட நிர்மலா சீதாராமன், மாலையில் வருமான வரி அதிகாரிகள் குடியிருப்பான ‘சிகரம்’ அடுக்குமாடி கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

சென்னையில் உள்ள வருமான வரி அலுவலக வளாகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்காக 65 கோடி ரூபாய் செலவில் 243.48 சதுர மீட்டர் பரப்பளவில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.  சிகரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த குடியிருப்பு வளாகத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய வருவாய் செயலர் தருண் பஜாஜ், மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் மொஹபத்ரா, வருமான வரித்துறை தலைமை ஆணையர் டி. சி. பட்வாரி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

முன்னதாக சென்னை வந்த ஒன்றிய நிதியமைச்சரை மாநில நிதியமைச்சர் பிடிஆர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி வரவேற்று சந்தித்தார். அண்மையில் ஜிஎஸ்டி சீர்திருத்த கவுன்சிலில் பிடிஆரை ஒர் உறுப்பினராக அறிவித்திருந்தார் நிர்மலா சீதாராமன். அதற்கு ஏற்கனவே ட்விட்டரில் நன்றி தெரிவித்திருந்த பிடிஆர். நேற்று நேரிலும் நன்றி தெரிவித்தார்.

பெட்ரோல்- டீசல் ஜிஎஸ்டிக்குள் வருவது, தமிழகத்துக்கான நிலுவைத் தொகை உள்ளிட்ட விவகாரங்களில் ஒன்றிய நிதியமைச்சரை கடுமையாக எதிர்த்து வரும் பிடிஆர், நேற்று ஒன்றிய நிதியமைச்சரை சந்தித்தது முக்கியத்துவம் பெறுகிறது.

**-வேந்தன்** 

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *