cவேளாண் மண்டலம்: இன்று சட்ட முன்வடிவு!

Published On:

| By Balaji

வேளாண் மண்டலம் தொடர்பான அறிவிப்புக்குத் தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுவதாகவும், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதி அளிக்க மாட்டோம் எனவும் சேலம் மாவட்டம் தலைவாசலில் கடந்த 9ஆம் தேதி நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் வரவேற்பு தெரிவித்தன.

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின், காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய அரசுதானே அறிவிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியதோடு, இதுதொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி பெற்றதா என்றும் கேட்டிருந்தார். இந்தப் பிரச்சினை நேற்று சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. திமுக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வேளாண் மண்டலமாக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட அனைத்துத் துறை அமைச்சர்களும் அதில் பங்கேற்றனர். வேளாண் மண்டலம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இறுதியாக காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்குத் தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. வேளாண் மண்டலமாக மாற்றுவதில் உள்ள சட்டச் சிக்கல்களை ஆராய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சட்டமன்றக் கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று (பிப்ரவரி 20) பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பது தொடர்பாகச் சட்ட முன்வடிவு கொண்டுவரப்படவுள்ளது. இதன்மீது விவாதம் நடைபெற்ற பிறகு வாக்கெடுப்பு நடத்தி சட்டமாக்கப்படும். நேற்று சட்டமன்றத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ‘வேளாண் மண்டலம் தொடர்பாகத் தீர்மானம் கொண்டுவந்தால் ஆதரிப்போம்’ என்று தெரிவித்திருந்தார். இதன்மூலம் இன்று சட்ட முன்வடிவம் கொண்டுவரப்பட்டால், அது ஒருமனதாகவே நிறைவேற வாய்ப்புள்ளது.

**-த.எழிலரசன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share