தமிழகத்தில் போதைப் பொருட்கள் முற்றிலும் தடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்.
2 நாள் விடுமுறைக்குப் பின்னர் சட்டமன்றம் இன்று காலை கூடியது. இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது பாமக தலைவர் ஜிகே மணி எம்எல்ஏ போதைப் பொருள் தடுப்பு தொடர்பாகக் கேள்வி எழுப்பினார்.
அவர் பேசுகையில் போதைப் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தாலும் பள்ளி கல்லூரிகளுக்கு முன் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறது. இது சாதாரணமானது அல்ல. பான் மசாலா குட்கா போன்ற பொருட்கள் வடமாநிலங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இவை உற்சாகத்தைக் கொடுக்கும் என நம்பி மாணவர்கள் இதற்கு அடிமையாகி விடுகின்றனர். எனவே பான் மசாலா குட்கா போன்ற பொருட்களுக்கான தடை சட்டத்தில் மேலும் திருத்தம் கொண்டு வந்து முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரை தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதைப் பொருட்கள் விற்பவர்கள் கடத்துபவர்கள் மீது 10,673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 11,247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
15 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பது மற்றும் கடத்தியது தொடர்பாக 2,458 வழக்குகள் போதை தடுப்புப் பிரிவில் பதிவு செய்யப்பட்டு 5,793 கிலோ கஞ்சா மற்றும் இதர போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் 3413 பேர் கைது செய்யப்பட்டு 80 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வோருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப் போதை மற்றும் மன மயக்கப் பொருட்கள் தடை சட்டம் 1985ல் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்படும்.
மேலும் காவல் துறையினருக்கு ஊக்க ஊதியம் சிறப்புப் பரிசு வழங்கப்படும் என்று ஜிகே மணி எம்எல்ஏ கேள்விக்குப் பதில் அளித்த முதல்வர், காவல் துறையினரை ஊக்குவிக்க நிச்சயம் இந்த அரசு தயங்காது. இது குறித்து பரிசீலித்து, என்னென்ன வகையில் அவர்களுக்குச் சிறப்புச் செய்யமுடியுமோ அதை ஆராய்ந்து அவர்களுக்கு உரிய ரிவார்டு நிச்சயம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்தார்
**-பிரியா**�,