சுற்றுலா பயணிகளுக்கான தடையை நீக்கக் கோரி போராட்டம்!

politics

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என டாக்ஸி ஓட்டுநர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமலுக்கு வரவுள்ளது. அதில், நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், மக்களுக்கு அனுமதி இல்லை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி தாவரவியல் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம், ரோஜா பூங்கா, பைக்காரா நீர்வீழ்ச்சி உள்பட மாவட்டம் முழுவதும் சுற்றுலா தலங்கள் அதிகளவில் இருக்கின்றன. இதுபோன்று தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் சுற்றுலா பகுதிகள் இருக்கின்றன. இது கோடைக்காலம் என்பதால் பெரும்பாலான மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில், தமிழக அரசு அனைத்து சுற்றுலா பகுதிகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகளை நம்பிதான் தொழிலே நடக்கும். கால் டாக்ஸி ஓட்டுநர்கள், ஹோட்டல்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் என அனைவருமே இதை நம்பியுள்ளதால், அவர்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்களின் வருவாயை பாதிக்கும் இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து கொடைக்கானல் சுற்றுலா தள சிறுவணிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் சங்கம் உள்ளிட்ட சுற்றுலா தொழில் புரிவோர் சங்கங்கள் ஒன்றாக இணைந்து அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொடைக்கானலில் சுற்றுலாவுக்கு தடை விதிக்கக் கூடாது என்றும், சுற்றுலா பயணிகளை எந்தவித தடையும் இன்றி வந்து செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றுள்ளனர். சுற்றுலா தொழில் புரிவோர் சங்கங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

**வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.