காவிரி வேளாண் மண்டல அறிவிப்பு தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 20 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய, ஆளுநர் ஒப்புதலுடன் அது சட்டமானது. ஆனாலும், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பழைய திட்டங்கள் தொடரும் என கூறியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருந்தாலும் காவிரி டெல்டாவை வேளாண் மண்டலம் என அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தஞ்சாவூரில் பாராட்டு விழா எடுக்க விவசாய சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் வேளாண் மண்டலக் கோரிக்கையை வலியுறுத்திய பாமக நிறுவனர் ராமதாஸூக்கும் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (மார்ச் 4) வெளியிட்ட அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களின் நான்கரை ஆண்டு பெருங்கனவு வெற்றிகரமாக நனவாகியிருக்கிறது. காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் அந்த கனவை நிறைவேற்றி வைத்தவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்றால், அந்த கனவு நிறைவேற அனைத்து வழிகளிலும் அடிப்படையாக இருந்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ் தான்” என்று தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலில் வலியுறுத்திய அரசியல் கட்சித் தலைவர் ராமதாஸ் தான் எனவும், 2016 சட்டப்பேரவை தேர்தலுக்கான பாமகவின் தேர்தல் அறிக்கையில் இதற்கான வாக்குறுதியும் அளிக்கப்பட்டிருந்ததாகவும், அத்தேர்தலில் வேறு எந்த கட்சியும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் வாக்குறுதி அளிக்கவில்லை எனவும் தெரிவித்த அன்புமணி,
“2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டம் அறிவிக்கப்பட்டபோது அதை எதிர்த்து முதன்முதலில் குரல் கொடுத்தவர் ராமதாஸ் தான். அதுமட்டுமின்றி, 03.03.2017 அன்று என்னை நெடுவாசலுக்கு அனுப்பி, அங்கு போராடி வரும் மக்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்க வைத்ததுடன், தனியாகவும் ஒரு போராட்டத்தை நடத்த வைத்தார். தொடர்ந்து 21.06.2017 அன்று கதிராமங்கலத்துக்கு என்னை அனுப்பி எண்ணெய்க் கிணறுகளுக்கு எதிராக போராட்டம் நடத்த வைத்தார்” என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து காவிரி டெல்டா விவசாயிகளுக்காக ராமதாஸ் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என சிலவற்றை பட்டியலிட்ட அன்புமணி, “ராமதாஸின் இந்த இடைவிடாத வலியுறுத்தல் காரணமாகவே காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கரை ஆண்டுகளுக்கு முன் பாமக உருவாக்கிய இக்கோரிக்கையை சாத்தியமாக்கிய பெருமை ராமதாஸையே சேரும்” என்றும் குறிப்பிட்டார்.
மேலும், “காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை உருவாக்கிக் கொடுத்த பாமக நிறுவனர் ராமதாஸுக்கு விவசாய அமைப்புகளின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் வரும் 14-ம் தேதி சனிக்கிழமை இப்பாராட்டு விழா நடைபெறும். இவ்விழாவில் ராமதாஸுடன் நான், பாமக தலைவர் ஜி.கே.மணி மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகளின் தலைவர்களும், விவசாயிகளும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொள்வர்” என்றும் அன்புமணி தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
**எழில்**
�,