உரிமை குழு நோட்டீஸ் மேல்முறையீடு வழக்கு தொடர்பாக ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
சட்டமன்றத்திற்கு குட்கா கொண்டுசென்ற விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை மீறல் குழு இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, சபாநாயகர், உரிமை மீறல் குழு ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இடைக்காலத் தடையை நீக்க வேண்டுமெனவும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும் சட்டமன்ற செயலாளர், உரிமை மீறல் குழு தலைவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இவ்வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று (அக்டோபர் 13) விசாரணைக்கு வந்தது. சட்டமன்ற செயலாளர் தரப்பில், உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில்தான் தவறுகள் சரிசெய்யப்பட்டு புதிய நோட்டீஸ் அளிக்கப்பட்டதென தெரிவிக்கப்பட்டது.
உரிமைக் குழு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோமையாஜி, “உரிமை மீறல் பிரச்சினை என்பது சட்டமன்ற அதிகாரத்துக்கு உள்பட்டது. உரிமை மீறல் குழு அனுப்பும் நோட்டீஸுக்கு எம்.எல்.ஏ.க்கள் பதிலளிக்க வேண்டும். உரிமை குழு அதனை ஆராய்ந்து சட்டமன்றத்துக்கு தனது முடிவை அறிவிக்கும். ஆகவே, எவ்வித முகாந்திரமும் இல்லாமல் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
வாதங்களை கேட்டுக்கொண்ட நீதிபதிகள், நோட்டீஸுக்கு தனி நீதிபதி விதித்த இடைக்கால தடையை நிறுத்திவைக்க மறுத்துவிட்டனர். மேல்முறையீடு தொடர்பாக ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்தனர்.
**எழில்**�,