தமிழகம் முழுவதும் பரபரப்போடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த சசிகலாவின் விடுதலையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. சிறையிலிருந்து விடுதலையாவதற்கு இன்னும் ஒரு வாரம் கூட முழுமையாக இல்லாத நிலையில், திடீரென அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. இதனால் அவர் குறித்த நாளில் விடுதலையாவாரா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்திருக்கிறது. ஆனால் அவர் சிகிச்சை பெறுவதற்கும், சிறையிலிருந்து விடுதலையாவதற்கும் எந்தத் தொடர்புமில்லை என்கிறார்கள் அதிகாரிகள்.
கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ என பல்வேறு அரசியல் தலைவர்களின் சிறை வாழ்க்கையின்போது, அவர்களைக் கண்காணிக்கும் சிறைத்துறை கண்காணிப்பாளர் பொறுப்பில் இருந்து டிஐஜி ஆக ஓய்வு பெற்றுள்ள மூத்த அதிகாரி ஜி.ராமச்சந்திரனிடம் இதுபற்றி கேட்டோம்…
‘‘எந்தவொரு கைதிக்கும் சிறையிலிருந்து விடுதலையாவதற்கான நாள் குறிக்கப்பட்டுவிட்டால், அதிலிருந்து ஒரு நாள் கூட அவர்களை கூடுதலாக சிறையில் வைத்துக்கொள்ள சிறைத்துறை விதிகளில் இடமில்லை. அதனால் ஜனவரி 27 ஆம் தேதியன்று, மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போதே, அவரை சிறையிலிருந்து விடுவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அதற்கான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு, அவரிடம் கையெழுத்துப் பெறப்படும். அப்போதே அவருடைய பொருள்கள் அவரிடம் ஒப்படைக்கப்படும். அவருக்கு அதுவரை தரப்படும் போலீஸ் பாதுகாப்பும் வாபஸ் பெற்றுக்கொள்ளப்படும். அதற்குப் பிறகு அவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சையைத் தொடரலாம். சாதாரண கைதியாக இருந்தாலும் அரசியல் தலைவராக இருந்தாலும் எல்லோருக்கும் சிறை விதி என்பது ஒன்றுதான். அதனால் ஜனவரி 27 அன்று காலையில் அவரை விடுதலை செய்வதற்கு கர்நாடகா சிறைத்துறை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள். இதில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை’’ என்று தெளிவுபடுத்தினார் ஓய்வு பெற்ற சிறைத்துறை டிஐஜி ஜி.ராமச்சந்திரன்.
இதற்கிடையில் சசிகலாவுக்கு தரப்பட்ட சிகிச்சை குறித்தும், பரிசோதனை முடிவுகள் குறித்தும் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. சிறையில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பவுரிங் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு இரண்டு முறை கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு முறையும் நெகட்டிவ் என்று வந்துள்ளதாகவும், காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்து குணமாகி வருவதால் அவர் மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் **டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலாவின் உறவினர்கள் எடுத்த முயற்சியின் காரணமாகவே அவரை விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க அனுமதி தரப்பட்டுள்ளது. அதற்குப் பின் எடுத்த பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது**.
அரசு மருத்துவமனையில் எடுத்த பரிசோதனை முடிவை வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்காமல் சிறைக்கு அனுப்பியிருந்தால் அவருடைய உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று அவருடைய உறவினர்கள் தரப்பில் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி சசிகலாவின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் நம்மிடம் பேசினர்…
‘‘அவர் சிறையில் மிகவும் பலவீனமாகத்தான் இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் விடுதலை நாள் நெருங்கி விட்ட நிலையில் அவர் மனதளவிலும் உடலளவிலும் சற்று உற்சாகமாக இருந்திருக்கிறார். சிறையில் இருந்த அவருக்கு கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என்பதே பெரும் சந்தேகமாகவுள்ளது. அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதும் உடனே நல்ல மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை எடுத்திருந்தால் தொற்று உறுதியானதை உடனே கண்டுபிடித்து சிகிச்சை அளித்திருக்கலாம். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று சொல்லி, அவர் சிகிச்சையில் இருக்கும்போதே அவரை மீண்டும் சிறைக்கு அனுப்புவதற்கு முயற்சி நடந்திருக்கிறது.
சசிகலா கடுமையான நீரழிவு நோய் பாதிப்புக்கு உள்ளானவர் என்பது பரப்பண அக்ரஹார சிறை அதிகாரிகளுக்கும் நன்கு தெரியும். அப்படியிருக்கையில் இவ்வளவு அஜாக்கிரதையாக இருந்ததற்குக் காரணம் புரியவில்லை. அவர் சிறையில் இருக்கும்போதே அவருக்குப் பலவிதங்களிலும் தொந்தரவு கொடுப்பதற்கு முயற்சிகள் நடந்தன. இப்போது அவர் சிறையிலிருந்து வெளியே வருவது பிடிக்காத சிலர், அவருக்கு தரமான சிகிச்சை தரவிடாமல் தடுத்து உயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்களா என்ற சந்தேகமும் எங்களுக்கு எழுந்திருக்கிறது.’’ என்று பதற்றத்தோடு கூறினர்.
**சசிகலாவுக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், ஐந்து நாள்களுக்குள் அவர் பயணம் செய்யும் அளவுக்கு குணமடைவாரா என்பது சந்தேகமாகவுள்ளது. அதனால் அவர் திட்டமிட்டபடி ஜனவரி 27 அன்று அங்கிருந்து சென்னைக்குத் திரும்புவதற்கு வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.** சசிகலா சிறையிலிருந்து வெளியாகும் நாளில் சென்னையில் ஜெயலலிதாவின் நினைவிடத்திறப்பு விழா நடக்கவுள்ளது. அவருடைய விடுதலைச் செய்தியை முடக்கும்நோக்கத்தில்தான் இந்த தேதி குறிக்கப்பட்டதாக அதிமுக வட்டாரத்தில் ஏற்கெனவே பேசப்பட்டு வருகிறது. இந்தச்சூழலில் ஜனவரி 27 அன்று அவர் சிகிச்சையில் இருக்கும்போதே அவருக்கு விடுதலை அளிக்கப்பட்டாலும் அவர் சிகிச்சையிலிருந்து குணமாகி சென்னை திரும்பும் நாளில்தான் அவருக்கு அமர்க்கள வரவேற்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சசிகலா ஜனவரி 27 அன்று எங்கிருந்து விடுதலையானாலும் அது அன்றைக்கு ஹாட் நியூஸ்தான்!
–பாலசிங்கம்�,