தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு பணிகளில் 20% முன்னுரிமை அளித்து சட்டம் இயற்றப்பட்டது. தொடர்ந்து அதிமுக ஆட்சியில் 2020 ஆம் ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு மட்டும் அரசு பணிகளில் இனி வரும் காலங்களில் 20 சதவீத இட ஒதுக்கீடு என்று சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.
தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு நடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் கடந்த ஜூன் 21ஆம் தேதி நடந்த ஆளுநர் உரையில், “தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும், அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து மனிதவள மேலாண்மை துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கொரோனா தொற்றால் இரண்டு பெற்றோரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசு பள்ளிகளில் தமிழ்மொழியில் பயின்ற நபர்களுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் ” என்று அறிவித்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,” கொரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர் ஆகியோருக்கு வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.
போரில் உடல் தகுதியை இழந்த ராணுவத்தினர், கணவனை இழந்தவர்கள், சாதி மறுப்பு திருமண தம்பதியர் ஆகியோருக்கும் சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் வரிசை எண்கள் ஒதுக்கப்பட்டு, ஒவ்வோரு முறையும் சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணையின்படி, வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரை பள்ளிப்படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு என்று முழுவதுமாக தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். வேறு மொழிகளில் படித்து, தேர்வை மட்டும் தமிழில் எழுதியவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. தனித் தேர்வர்களுக்கும் இட ஒதுக்கீடு பொருந்தாது. அதுபோன்று, தமிழ் வழியில் படித்ததற்கான கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மையை ஆய்வு செய்த பிறகே இடஒதுக்கீடு அளிக்கப்படும்.
**-வினிதா**
�,