பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது ஏற்பட்ட சம்பவம் பற்றி உச்ச நீதிமன்றம் இன்று (ஜனவரி 7) உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரதமர் மோடி ஜனவரி 5 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் நலத்திட்ட உதவிகள் விழா மற்றும் தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்ற நிலையில், லுதியானா- ஃபெரோஸ்பூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மேம்பாலத்தில் பிரதமரின் கான்வாய் 15 முதல் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. பிரதமர் செல்லும் பாதையில் விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் தடைபட்டது பிரதமரின் வழித்தடம். இதையடுத்து திரும்பிச் சென்ற பிரதமர் டெல்லி திரும்பிவிட்டார்.
இந்நிலையில் இதுகுறித்து பஞ்சாப் காங்கிரஸ் அரசு பிரதமரின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டியதாக பாஜக குற்றம் சாட்டியது. ஆனால் இதை அரசியலாக்கக் கூடாது என்று பஞ்சாப் முதல்வர் சென்னி தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து நீதிமன்றக் கண்காணிப்போடு விசாரணை நடைபெற வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங் வழக்குத் தொடுத்தார். இந்த மனு இன்று (ஜனவரி 7) தலைமை நீதிபதி என்.வி. ரமணா மற்றும் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங், “சிறப்பு பாதுகாப்புக் குழு (திருத்தம்) சட்டம், 2019-ன் கீழ், பிரதமருக்கு உரிய பாதுகாப்பை அளிக்கும் எஸ்பிஜியின் எந்த உறுப்பினருக்கும் உதவியாக செயல்படுவது மத்திய, மாநில மற்றும் பிற உள்ளூர் அதிகாரிகளின் கடமை.
இந்தப் பயணத்தில், பிரதமரின் வாகனம் பயணிக்க முடியாத வகையில் நிறுத்தப்பட்டது பெரும் சட்ட மீறலாகும். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பஞ்சாப் அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. ஆனால் இந்த விவகாரம் தொழில் ரீதியாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும், அதை மாநில அரசால் செய்ய முடியாது. மேலும் மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தின் தலைவராக இருக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி ஏற்கனவே துறை ரீதியான ஊழல் புகாரில் சர்ச்சைக்குள்ளானவர். ஏற்கனவே போலீஸ் அதிகாரிகளால் இந்த நீதிபதியின் நடத்தை விசாரிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நீதிபதி தன்னை பற்றி விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை தானே நடத்தியவர். உச்ச நீதிமன்றமே அதை நிறுத்தி வைத்தது. எனவே அவர் தலைமையில் நடக்கும் விசாரணை சரியாக இருக்காது.
இதுபோன்ற பிரச்சினைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்” என்று வாதாடினார் மணீந்தர் சிங்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “பிரதமரின் கான்வாயில் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் எதிர்ப்புகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு சமம். இந்த விஷயத்தை யாரிடமும் விட்டுவிட முடியாது. எனவே என்.ஐ.ஏ. இதை விசாரிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
ஒன்றிய அரசின் சார்பில் வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “பிரதமரின் வாகனம் சாலை மார்க்கமாக செல்கிறது என்றால், அந்த மாநிலத்தின் டிஜிபி குறிப்பிட்ட அந்த வழித்தடத்தைப் பார்வையிட்டு பிரதமரின் பயணத்துக்கு ஏற்றதாக இருக்கிறதா என்று ஆராய்வார். அந்த வகையில் பிரதமர் பயணம் செய்வதற்கு பஞ்சாப் டிஜிபி அனுமதி அளித்துள்ளார். பிரதமரின் வாகனத்துக்கு முன்பு ‘வார்னிங் கார்’என்ற இன்னொரு வாகனம் செல்லும். வழியில் ஏதேனும் தடை இருக்கிறதென்றால் அந்த வாகனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அதன் பின் கான்வாய் நிறுத்தப்படும். ஆனால், சம்பவ இடத்தில் போராட்டக் காரர்களோடு அந்த மாவட்ட போலீஸ் எஸ்பி டீ குடித்துக் கொண்டிருந்திருக்கிறார். இப்படி ஒரு போராட்டம் பற்றிய தகவல், பிரதமரின் காருக்கு முன்னே செல்லும், ‘வார்னிங் காரு’க்கு தெரிவிக்கப்படவே இல்லை.
மேலும் குறிப்பிட்ட சில அமைப்புகளின் இந்த போராட்டம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தோடு தொடர்புடையதாகவும் இருக்கலாம். எனவே இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரிக்க போதுமான தேவை உள்ளது.
மேலும் பஞ்சாப்பில் நடந்த இந்த சம்பவம் சர்வதேச அளவில் பிரதமருக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் வகையில் இருந்துள்ளது. எனவே அனைத்து வித தகவல்களையும் உச்ச நீதிமன்றம் சீலிடப்பட்ட உறைக்குள் வைத்துப் பெற்று அதன் அடிப்படையில் இந்த நீதிமன்றம் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் வழிகாட்ட வேண்டும்” என்று குறிப்பிட்டார் துஷார் மேத்தா.
பஞ்சாப் மாநில அரசின் அட்வகேட் ஜெனரல் டி.எஸ்.பட்வாலியாவும் இன்றைய வழக்கு விசாரணையில்,
“பிரதமரின் பாதுகாப்பை மாநில அரசு ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை. சம்பவம் நடந்த அன்றே இதுகுறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டுவிட்டது. இதுகுறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநில முதல்வர் சென்னி, ‘மோடி அவர்கள் நமது பிரதமர்’என்று தெளிவாக சொல்லியிருக்கிறார். இந்த மனு அரசியல் துர்நாற்றம் அடிப்பதாக இருக்கிறது”என்று வாதிட்டார்.
இந்த சம்பவம் குறித்து பஞ்சாப் அரசு அமைத்த குழுவின் தலைவரான நீதிபதி குறித்து எழுந்த சர்ச்சைக்கு பதிலளித்த பட்வாலியா,
“அந்த நீதிபதி மீது ஏதேனும் புகார்கள் இருந்தால் அதற்காக நான் வாதாட முடியாது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு அமைத்துள்ள ஆணையத்தில் உறுப்பினராக இருக்கும் எஸ்பிஜியின் ஐஜியும் அதற்குப் பொறுப்பானவர்தான்” என்று பதிலளித்தார்.
அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ஒன்றிய அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையத்தில் எஸ்பிஜி ஐஜிக்கு பதிலாக உள்துறைச் செயலாளர் இடம்பெறலாம்” என்று ஆலோசனை தெரிவித்தார்.
அப்போது தலைமை நீதிபதி ரமணா சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இந்த இரண்டு ஆணையங்களும் இல்லாமல் சுயேச்சையான ஓர் ஆணையம் இதை விசாரிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா?” என்று கேட்டார்.
அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “எல்லாவிதமான ஆவணங்களையும் நாளைக்குள் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதன் பின் இதை நீதிமன்றம் திங்கள் கிழமை கூட விசாரிக்கலாம்” என்று கேட்டுக் கொண்டார்.
அதன் பின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு,
“பிரதமரின் பாதுகாப்பு என்ற முக்கியமான அம்சத்தைக் கருத்தில் கொண்டு பஞ்சாப் சண்டிகர் மாநில உயர் நீதிமன்றப் பதிவாளர் பஞ்சாப்பில் பிரதமரின் பயணம் பற்றிய ஆவணங்களை பாதுகாக்க வேண்டும்.
பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குனர், பிரதமரின் பாதுகாப்பு அமைப்பான எஸ்பிஜி உயரதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பஞ்சாப் உயர்நீதிமன்றப் பதிவாளருக்கு ஒத்துழைக்க வேண்டும். பிரதமரின் பஞ்சாப் பயணம் பற்றிய அனைத்து ஆவணங்களும் அவரிடம் பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும்
இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு உதவும் அதிகாரிகளாக பஞ்சாப் டிஜிபியையும், என்.ஐ.ஏ.வின் ஒரு உயரதிகாரியையும் பொறுப்பாளர்களாக இந்த நீதிமன்றம் நியமிக்கிறது”என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தொடர்ந்து,
“பிரதமரின் பஞ்சாப் பயணம் பற்றி மத்திய, மாநில அரசுகள் அமைத்த ஆணையங்கள் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் ஜனவரி 10 ஆம் தேதி வரை தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க வேண்டும். இது இந்த உத்தரவில் இடம்பெறாது. ஆனால் ஒரு புரிதலின் அடிப்படையில் சொல்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
**-வேந்தன்**
�,