பிரதமர் தடுத்து நிறுத்தம்: அமித்ஷா அமைத்த விசாரணைக் குழு!

Published On:

| By Balaji

ஜனவரி 5ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் பிரதமரின் கான்வாய் இருபது நிமிடங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது பற்றி பஞ்சாப் அரசு விசாரணை அமைக்க உயர் மட்டக் குழுவை அமைத்த நிலையில், நேற்று இந்திய ஒன்றிய அரசும் இதுபற்றி விசாரிக்க தனிக் குழுவை அமைத்துள்ளது.

ஜனவரி 5ஆம் தேதி பஞ்சாப்பில் ஃபெரோஸ்பூரில் நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைத்து எதிர்வரும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார். அதற்காக அவர் பதிண்டா விமானத்தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் செல்ல வேண்டியது மேக மூட்டத்தால் ரத்து செய்யப்பட்டது. எனவே சாலை வழியாகச் சென்ற பிரதமர் ஒரு மேம்பாலத்தில் விவசாயிகளின் போராட்டங்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இருபது நிமிடங்கள் பிரதமரின் கார் ஒரு மேம்பாலத்தில் தவித்த நிலையில் அதன்பின் திரும்பிச் சென்றுவிட்டார் பிரதமர். அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு இருவர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. இக்குழு விசாரணையைத் தொடங்கிவிட்டது.

இந்த நிலையில் நேற்று (ஜனவரி 6) இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இதுகுறித்து தனியாக விசாரணை ஆணையம் அமைத்துள்ளார்.

ஒன்றிய அமைச்சரவை செயலகத்தின் செயலாளர் (பாதுகாப்பு) சுதிர் குமார் சக்சேனா தலைமையிலான குழுவில், உளவுத் துறை (ஐபி) இணை இயக்குநர் பல்பீர் சிங் மற்றும் எஸ்பிஜி பிரிவின் ஐஜி எஸ் சுரேஷ் ஆகியோர் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் ஒன்றிய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், “இந்திய அரசும், பஞ்சாப் மாநில அரசும் விசாரணை ஆணையங்களை அமைத்துள்ளன. விசாரணைக்குப் பிறகு பிரதமரின் பாதுகாப்பு மீறல் தொடர்பான அனைத்து தகவல்களையும் சேகரித்த பிறகு, அரசாங்கம் பெரிய மற்றும் கடினமான முடிவுகளை மேற்கொள்ளும்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே ஹுசைனிவாலா எல்லைக்குச் செல்லும் சாலையில் பிரதமரின் கான்வாயை தடுத்த அடையாளம் தெரியாத போராட்டக்காரர்கள் மீதும் பஞ்சாப் காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இதுகுறித்து ஆஜ்தக் டிவிக்கு அளித்த பேட்டியில், “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஏஐசிசி பொறுப்பாளர் ஹரிஷ் சவுத்ரி மூலம் எனக்கு ஒரு செய்தியை அனுப்பியிருக்கிறார். அதில், ‘மோடி நாட்டின் பிரதமர். அவரது பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடு இருந்தால், அது குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். நாங்கள் விசாரணை ஆணையம் அமைத்துள்ளோம்” என்று கூறினார். இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் பஞ்சாப் முதல்வரிடம் பேசியிருக்கிறார்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share