_ஐ.நா. மாற வேண்டுமா? உரையாற்றும் மோடி

Published On:

| By Balaji

ஐ.நா. சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் இந்த ஆண்டிற்கான உயர்மட்டக் குழு 2020 ஜூலை 17 அன்று காலை 09.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமாக சிறப்புரை ஆற்றவிருக்கிறார். நியூயார்க் நகரில் நடக்கும் இறுதி நிகழ்ச்சியில் நார்வே பிரதமர் மற்றும் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ் ஆகியோருடன் இணைந்து பிரதமர் உரையாற்றவுள்ளார்.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த உயர்மட்டக் குழு கூட்டத்தில் அரசு, தனியார் துறை, பொதுச்சமூகம் மற்றும் கல்வியாளர்களின் பிரதிநிதிகள் என சமூகத்தின் பல்வேறு மட்டங்களையும் சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர். “கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பன்முகத் தன்மை: 75வது ஆண்டில் எத்தகைய ஐ.நா. சபை நமக்குத் தேவைப்படுகிறது” என்பதே இந்த ஆண்டிற்கான உயர்மட்டக் குழு கூட்டத்தின் பேசுபொருள் ஆகும்.

மாறி வரும் சர்வதேசச் சூழல் மற்றும் கொரோனா பெருந்தொற்று ஆகியவற்றின் பின்னணியில் நடைபெறும் இக்கூட்டம் பன்முகத் தன்மையினை வளர்த்தெடுக்கும் முக்கியமான சக்திகள் குறித்து கவனம் செலுத்துவதாகவும், வலுவான தலைமை, சிறப்பாகச் செயல்படும் சர்வதேச அமைப்புகள், விரிவடைந்த பங்கேற்பு மற்றும் உலகளாவிய மக்கள் நலனின் அதிகரித்து வரும் முக்கியத்துவம் ஆகியவற்றுக்கான வழிகளைக் கண்டறிவதாகவும் இருக்கும்.

ஐ.நா. வின் பாதுகாப்புக் கவுன்சிலில் 2021-22 காலப்பகுதிக்கென நிரந்தரமற்ற உறுப்பினராக பெருவாரியான ஆதரவுடன் ஜூன்17 அன்று இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஐ.நா. சபையில் பிரதமர் மோடி நிகழ்த்தும் முதல் உரை இது. மத்திய அரசின் செய்திக் குறிப்பில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share