நெருக்கடியில் ஊடகங்கள்: பிரதமருக்கு தலைவர்கள் கோரிக்கை!

Published On:

| By Balaji

பத்திரிகை நிறுவனங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென பிரதமருக்கு தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாகத் திகழும் ஊடகங்கள், கொரோனா நோய்ப் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கத்தால் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன. நாடு நெருக்கடிகளைச் சந்திக்கும்போது, அவற்றிலிருந்து மீண்டு வருவதற்கு துணை நிற்கும் ஊடகங்களே இப்போது நெருக்கடியைச் சந்திக்கும் நிலை உள்ளன்.

ஊடகங்களில் குறிப்பாக அச்சு ஊடகங்கள் மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. அவை குறித்து விளக்குவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களை இந்து குழுமத்தின் தலைவர் என்.ராம் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் நேரில் சந்தித்துப் பேசிவருகிறார்கள்.

பொருளாதார மந்தநிலை காரணமாக அச்சு ஊடகங்கள் எதிர்கொண்டு வரும் நெருக்கடிகள் குறித்தும், அவற்றைக் களைய அரசுத் தரப்பிலிருந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

மேலும், செய்தித்தாள்களை அச்சிடுவதற்கான நியூஸ் பிரிண்ட் காகிதம் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும், அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் விளம்பரங்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், அரசு ஊடகங்களின் விளம்பரக் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர். இதுதொடர்பாக பிரதமருக்கும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் பத்திரிகை நிறுவனங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மக்கள் பக்கம் நிற்கின்ற அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காகப் பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு, திமுகவின் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் நிச்சயம் துணை நிற்பார்கள். பிரதமரிடம் இதனை வலியுறுத்துவார்கள் என்ற உறுதியினையும் வழங்கினேன் என்று குறிப்பிட்ட திமுக தலைவர் ஸ்டாலின்,

“மாநிலத்தை ஆள்கின்ற அதிமுக அரசோ, மத்தியில் உள்ள பாஜக அரசோ, மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பேரழிவை உணர்ந்ததாகத் தெரியவில்லை; மக்களுக்கு உதவிட அவர்களுடைய மனம் இரங்கவில்லை, தெளிவான திட்டமும் செயல்பாடுகளும் இல்லை என்பதைப் பத்திரிகையாளர்களிடம் எடுத்துரைத்து, இவற்றை அச்சு ஊடகங்கள் முழுமையாக வெளிக்கொண்டு வந்து, அதன் மூலம் ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து, மக்களுக்கு உதவிகள் கிடைத்திடச் செய்ய வேண்டும்” என்று அவர்களிடம் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் நரேந்திர மோடி எழுதியுள்ள கடிதத்தில், “அச்சுக் காகிதங்கள் மீதான சுங்க வரியை நீக்க வேண்டும். நாளிதழ்களுக்கு அரசுகளிடமிருந்து வரவேண்டிய விளம்பரக் கட்டண பாக்கிகளை உடனுக்குடன் கொடுக்க உத்தரவிட வேண்டும். அரசு விளம்பரங்களுக்கான கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “செய்தித்தாள்களின் தயாரிப்புச் செலவு அதன் விற்பனை விலையை விட பல மடங்கு அதிகம் எனும் நிலையில், அதிக அளவில் விளம்பரங்கள் வந்தால் மட்டும் தான் தயாரிப்புச் செலவுக்கும் விற்பனை விலைக்கும் இடையிலான வித்தியாசத்தை சமன் செய்ய முடியும். பொருளாதார நிலைமை சரியாகி தனியார் நிறுவனங்களின் விளம்பரங்கள் வருவதற்கு இன்னும் பல மாதங்களோ, சில ஆண்டுகளோ ஆகக்கூடும் என்பதால் அதுவரை அச்சு ஊடகங்களுக்கு அதிக விளம்பரங்கள், அதிக விளம்பரக் கட்டணம் ஆகியவற்றின் மூலம் ஆதரவளிக்க வேண்டியது அரசின் தார்மீகக் கடமை ஆகும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

“கொரோனா கொடுமையால் பொது முடக்கத்திற்கு உள்ளாகியுள்ள மக்களுக்குப் பெரும் விழிப்புணர்வை அளிப்பதில் அச்சு ஊடகங்களின் பங்கு மகத்தானது. நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பத்திரிகைத் துறையினை பாதுகாப்பது சமூக நோக்கிலும் அத்தியாவசியமானதாகும். ஆகவே அவர்களின் கோரிக்கையை பிரதமர் பரிசீலிக்க வேண்டும்.” என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share