ஜூலை 18 குடியரசுத் தலைவர் தேர்தல்!

Published On:

| By admin

குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களையும், டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்கள் உட்பட அனைத்து மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களையும் கொண்டு குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்படும். இந்த தேர்தலில் மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431 ஆக உள்ளது. இதில், மாநில சட்டசபைகளின் மதிப்பு 5,43, 231 மற்றும் எம்.பி.களின் வாக்கு மதிப்பு 5,43,200 ஆகும். தேர்தலுக்கான மொத்த வாக்காளர்கள் 4809 பேர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இன்று (ஜூன் 9) தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்தார்.

வேட்பு மனு தாக்கல் ஜூன் 15ஆம் தேதி முதல் தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூன் 29. வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் ஜூலை 2. ஜூலை 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். ஜூலை 21ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும். ஜூலை 25ஆம் தேதி புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பார் என்று தெரிவித்துள்ளார்

ராஜ்யசபாவில் காலியாக உள்ள 57 இடங்களுக்குத் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share