`விஜயகாந்த் வருவாரா?: பிரேமலதா பதில்!

Published On:

| By admin

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகையில், மற்றவர்கள் நேரடியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து, விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு தேமுதிக கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார்.

சென்னையை அடுத்த புழலில் இன்று(பிப்ரவரி 7) தேமுதிகவின் நிர்வாகியின் இல்ல விழாவில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ”பணபலம், ஆட்சி பலம், அதிகார பலத்தை எதிர்த்து நாங்கள் போட்டியிடுகிறோம். நகர்புற உள்ளாட்சித் தேர்தல் என்பது ஆளுங்கட்சியினுடைய பணம், ஆட்சி, அதிகாரம் என அனைத்து பலத்தையும் எதிர்த்து உண்மை, நேர்மை, லட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு தேமுதிக, மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறது. ஆட்சியில் இருப்பவர்களுக்கு அதிகாரம் இருக்கிற மாதிரி தெரியும், ஆட்சியில் இல்லாதவர்கள் அதிகாரமற்றவர்கள்போன்று தெரியும். எப்படியிருப்பினும் உறுதியாக கேப்டனுக்கும், எங்கள் வேட்பாளர்களுக்கும் மக்கள் வாக்களித்து மாபெரும் வெற்றி வாய்ப்பை கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.

நீட் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழ்நாட்டிற்கு நீட் நுழைவுத் தேர்வு தேவையில்லை என்பது தான் தேமுதிகவின் நிலைப்பாடு. ஆனால் திமுகவும், அதிமுகவும் இதை மிகப் பெரிய அரசியலாக ஆக்குகிறார்கள். ஏற்கனவே அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டு, அது குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மீண்டும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதுவும் தற்போது திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், இந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது என்று பலர் தெள்ள தெளிவாகக் கூறுகின்றனர். இதை தெரிந்திருந்தும் அதிமுகவும்,திமுகவும் மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை” என்று கூறினார்.

விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வருவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “ விஜயகாந்த் பிரச்சாரம் செய்வது குறித்து இனிமேல்தான் முடிவு செய்யப்படும். எந்தெந்த பகுதிக்கு யார், யார் பிரச்சாரத்திற்கு போகிறார்கள் என்பதை இனிமேல்தான் முடிவு செய்வோம். அதன்பின்பு, தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்” என்று கூறினார்.
**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share