tகாங்கிரஸில் இணைய பிரசாந்த் கிஷோர் மறுப்பு!

Published On:

| By admin

2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வழிநடத்த சோனியா காந்தி அமைத்த அதிகாரம் பெற்ற செயற்குழுவின் உறுப்பினராகக் கட்சியில் சேரும் காங்கிரஸின் அழைப்பைத் தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சிக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். இதனால் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் பணியாற்றக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் 2024 ஆம் ஆண்டுக்கான தேர்தலை எதிர்கொள்ள அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழுவைச் சோனியா காந்தி அமைத்தார்.

இக்குழுவில் இணையக் காங்கிரஸ் விடுத்த அழைப்பை பிரசாந்த் கிஷோர் நிராகரித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தனது ட்விட்டர் பக்கத்தில்,
“பிரசாந்த் கிஷோர் உடனான விளக்கக்காட்சி மற்றும் கலந்துரையாடலைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் 2024 ஆம் ஆண்டுக்கான அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழுவை உருவாக்கி வரையறுக்கப்பட்ட பொறுப்புடன் குழுவின் ஒரு பகுதியாக பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர அழைப்பு விடுத்தார். ஆனால் பிரசாந்த் கிஷோர் அதை நிராகரித்து விட்டார். அவரது முயற்சிகள் மற்றும் கட்சிக்கு அவர் வழங்கிய ஆலோசனைகளை நாங்கள் பாராட்டுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிற்பகல் 3.41 மணிக்கு ரன்தீப் சுர்ஜேவாலா இந்த பதிவை வெளியிட்டிருந்த நிலையில் 4.05 மணிக்கு பிரசாந்த் கிஷோர் இதற்குப் பதில் அளிக்கும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில், ”அதிகாரம் பெற்ற செயல் குழுவின் ஒரு பகுதியாகக் கட்சியில் சேரவும், தேர்தலுக்குப் பொறுப்பேற்கும் காங்கிரஸின் தாராளமான வாய்ப்பை நான் நிராகரித்தேன். எனது கருத்துப்படி கட்சிக்கு என்னைவிடத் தலைமையும் கூட்டு விருப்பமும் தேவை. ஆழமாக வேரூன்றியிருக்கும் கட்டமைப்பு சிக்கல்களைச் சீர்திருத்தங்கள் மூலம் சரி செய்ய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share