sமுப்பது கோடி சர்ச்சையில் பிரசாந்த் கிஷோர்

Published On:

| By Balaji

திமுகவுக்காக வரும் சட்டமன்றத் தேர்தலில் உத்தி வகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள பிரசாந்த் கிஷோர் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருக்கிறார் என்ற புகார்களின் அடிப்படையில், டெல்லி வருமான வரித் தலைமை அலுவலகத்தில் இருந்து சென்னை வருமான வரி அலுவலகத்துக்கு விசாரணை நடத்துமாறு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. பிரசாந்த் கிஷோரை மையமாக வைத்து கிளம்பியுள்ள இந்த சர்ச்சை திமுகவையும் சேர்த்தே சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.

பிரசாந்த் கிஷோர் மீது புகார் கொடுத்தவர்கள் சென்னையைச் சேர்ந்த ராம ராவ், முருகேசன் ஆகியோர் என அந்தக் கடிதம் தெரிவிக்கிறது. நாம் விசாரித்த வகையில் இவர்கள் நெடுஞ்சாலைத் துறை, உள்ளாட்சித் துறைகளில் கான்ட்ராக்ட் காரர்களாக இருப்பவர்கள். ஆனால், ‘இந்தப் புகாரை நாங்கள் அனுப்பவே இல்லை. அடுத்து திமுக ஆட்சி வரப் போகிறது. அப்போது எங்களுக்கு அரசு கான் ட்ராக்டுகள் எதுவும் கிடைக்கக் கூடாது என்பதற்காக எங்கள் தொழில் எதிரிகள் யாராவது இப்படி செய்திருக்கலாம்” என்கிறார்கள் அவர்கள். மேலும் முருகேசன் என்பவர் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்முகவரியிலேயே இல்லை.

மேலும் முருகேசனின் முகவரி ரோஹினி பிளாட்ஸ் என்று குறிப்பிடப்பட்டிருக்க, அது பாஜக இளைஞரணி செயலாளர் வினோஜுக்கு சொந்தமான இடம் என்று முதலில் சந்தேகம் கிளம்பியது. ஆனால் விசாரித்ததில் அவருக்கும் அந்த இடத்துக்கும் சம்பந்தமில்லை என்று தெரியவந்தது.

கடிதத்தில் குறிப்பிடப்பட்டவர்களே இதை மறுக்கும் நிலையில் இதுபற்றி விசாரிக்கும்போது இன்னொரு கோணத்தில் ஒரு தகவல் கிடைத்தது.

“பிரசாந்த் கிஷோர் மீது அதிமுக தலைமை மிகவும் கோபத்தில் இருக்கிறது. அவர் திமுகவுக்கு உத்தி வகுப்பாளராக இருப்பதால் வரும் அரசியல் ரீதியான கோபம் இல்லை அது. திமுகவோடு ஒப்பந்தம் செய்யும் முன்னரே பிரசாந்த் கிஷோர் மக்கள் நீதி மய்யம் கட்சியோடு கொஞ்ச காலம் பணியாற்றினார். அதன் பின் அவர் அதிமுகவோடுதான் தேர்தல் பணியாற்ற திட்டமிட்டிருந்தார். இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மூன்று முறை சந்தித்தார். அதை ஒட்டி பிரசாந்த் கிஷோரிடம் அதிமுகவின் உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் விவரம் உள்ளிட்டவை முதல் கட்டமாக வழங்கப்பட்டன. இந்த அடிப்படைப் பணிகள் அதன் பிறகான பணிகளுக்காக பிரசாந்த் கிஷோருக்கு முப்பது கோடி ரூபாய் சில கட்டங்களாக அதிமுக சார்பில் வழங்கப்பட்டிருக்கிறது.

முதலில் 5கோடி ரூபாய், பின் 10 கோடி ரூபாய், அடுத்தது 5 கோடி ரூபாய், பின் 10 கோடி ரூபாய் என நான்கு கட்டங்களாக தொகை அதிமுக சார்பில் பிகேவுக்கு தரப்பட்டது. அதன் பின் கிணற்றில் போட்ட கல் போலவே இருந்தது. கட்சி விவரங்கள், கட்டணம் வாங்கிக் கொண்ட பிறகு சில வாரங்கள் ஆகியும் பணிகள் நடப்பது பற்றிய எந்த தகவல்களும் அதிமுகவுக்கு வரவில்லை. அதிமுக சார்பில் அவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, ‘ஆரம்ப கட்ட பணிகள் நடக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார்கள் பிகே தரப்பில். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் தெரியாத நிலையில் அதிமுக தரப்பில் கொடுத்த பணத்தையும் விவரங்களையும் திரும்பக் கேட்டிருக்கிறார்கள்.

அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிரசாந்த் கிஷோர் இதுபற்றி விளக்கிவிட்டு டெல்லி செல்வதாக கிளம்பினார். ஆனால் விமான நிலையம் போகாமல் கிழக்குக் கடற்கரை சாலைக்கு சென்று திமுக தலைவர் ஸ்டாலினின் மாப்பிள்ளையான சபரீசனை சந்தித்துப் பேசினார் என்ற தகவல் முதல்வருக்கு சொல்லப்பட்டது. அதனிடையேதான் திமுகவோடு பகிரங்கமாக தேர்தல் உத்தி வகுப்புப் பணியில் ஈடுபட்டார் பிரசாந்த் கிஷோர். நம்மிடம் வந்து பேசிவிட்டு இப்படி செய்துவிட்டாரே என்று பிரசாந்த் மீது கடும் கோபத்தில் இருக்கிறது அதிமுக”என்கிறார்கள்.

திமுகவில் பிரசாந்த் கிஷோரோடு பகிரங்கமாக தேர்தல் உத்தி வகுப்பு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், இதற்காக பிகேவுக்கு திமுக சார்பில் 350 கோடி ரூபாய் வரை கொடுக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த பணத்தை பிரசாந்த் கிஷோர் முறைப்படி வங்கிக் கணக்கின் மூலம் வாங்கினாரா, அல்லது கறுப்பில் வாங்கினாரா என்ற விசாரணையும் ஒரு பக்கம் வருமான வரித்துறையில் நடந்துகொண்டிருக்கிறது.

**-வேந்தன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share