pவிமானத்தில் சேட்டை செய்த பாஜக பெண் எம்.பி!

Published On:

| By Balaji

விமானத்தில் தான் முன்பதிவு செய்த இடத்தைத் தனக்கு ஒதுக்கவில்லை எனக் கூறி பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் விமான ஊழியர்களுடனும் சக பயணிகளுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மாலேகான் குண்டுவெடிப்பு தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டவர் பாஜக எம்.பி பிரக்யா சிங் தாக்கூர். மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவை “தேச பக்தர்” என்று நாடாளுமன்றத்தில் பேசி பெரும் சர்ச்சையில் சிக்கியவர்.

தற்போது மற்றொரு சர்ச்சையிலும் சிக்கியுள்ளார், கடந்த சனிக்கிழமை(டிசம்பர் 21) அன்று டெல்லியிலிருந்து போபாலுக்குச் செல்ல ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் முதல் வரிசையில் உள்ள சீட்டை முன்பதிவு செய்துள்ளார் பிரக்யா. விமானத்திற்கு வரும்போது சக்கர நாற்காலியில் வந்துள்ளார். அதனால் முன்வரிசையில் இடம் அளிக்க முடியாது எனவும் பாதுகாப்பு காரணங்களுக்காக இரண்டாவது வரிசையில் அமருமாறும் விமான ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு பிரக்யா தாக்கூர் மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபடவே, விமானம் புறப்படத் தாமதமானது.

இதனால் ஆத்திரமடைந்த சக பயணிகள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் ஒரு பயணி, பிரக்யாவை கீழே இறக்கி விடுமாறு விமான ஊழியர்களிடம் வலியுறுத்தியிருக்கிறார். மேலும் பிரக்யாவை பார்த்து ”நீங்கள் மக்களின் பிரதிநிதி. எங்களை தொந்தரவு செய்வது உங்கள் வேலையல்ல. தயவு செய்து அடுத்த விமானத்தில் வாருங்கள்” என்று கூறியுள்ளார்.

அதற்கு ”முதல் வகுப்பு வசதிகள் கூட இல்லாத இந்த விமானத்தில் நான் பயணம் செய்கிறேன் என்றால், அதற்கு ஏதோ காரணம் இருக்கிறது என்பதை உணருங்கள்” என்று பிரக்யா பதிலளித்தார்.

அப்போது ”முதல் வகுப்பு என்பது உங்களின் உரிமையல்ல. உங்களால் ஒருவர் பாதிக்கப்பட்டால் கூட அதற்கு தார்மீக ரீதியில் பொறுப்பேற்றுக் கொண்டு செயல்படும் பண்பை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒரு தலைவரைப் போல் நடந்து கொள்ளுங்கள். இந்த விமானத்தில் இருக்கும் 50 பேரை இப்படி சிரமத்திற்கு ஆளாக்குகிறீர்கள். இதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும்” என்று அந்த பயணி பதிலடி கொடுத்தார்.

அதற்கு ”நான் சரியாகத் தான் பேசுகிறேன்” என்று பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்தார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒருவழியாக விமான ஊழியர்கள் ஒதுக்கிய இருக்கையில் அமர்ந்து கொண்டு பயணம் செய்தார் பிரக்யா.

இதுகுறித்து விமான நிறுவனம், ” அவர் இருக்கை எண் 1ஏ-வை முன்பதிவு செய்திருந்தார். ஆனால் வரும் போது சக்கர நாற்காலியில் வருகை தந்தார். பிரக்யா தாக்கூர் சக்கர நாற்காலியுடன் வருவதாக முன்பதிவின் போது தெரிவிக்கவில்லை. டெல்லி-போபால் விமானத்தில் இருக்கும் முதல் வரிசை இருக்கைகள் அவசரக் கால சேவைக்காக அளிக்கப்படுகின்றன. இவை சக்கர நாற்காலியில் வருவோருக்கு ஒதுக்கப்படாது.அதன் காரணமாக இருக்கை எண் 2 ஏ/பி-யில் அமருமாறு கேட்டுக்கொண்டோம் , ஆனால் அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். அதனால் குழப்பம் ஏற்பட்டது ” எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள பிரக்யா, “எனக்குத் தண்டுவட பிரச்சனை இருக்கிறது. அதனால் கால் வைக்கும் அளவுக்கு இடம் இருக்கும் 1ஏ இருக்கையை முன்பதிவு செய்திருந்தேன். ஆனால் விமான ஊழியர்கள் என்னை அங்கு அமர கூடாது என கூறினர். மேலும் அது அவசரக்கால இருக்கை எனக் கூறினார்கள். ஆனால் அந்த இருக்கையில் அப்படி எதுவும் குறிப்பிடவில்லை. பிறகு நான் சாதாரண இருக்கையிலேயே வலியுடன் பயணித்தேன். பின்னர் போபால் விமான இயக்குநரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தேன் எனத் தெரிவித்துள்ளார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share