போலீசார் கழுத்தை பிடித்து நெரித்தனர்: பிரியங்கா காந்தி

Published On:

| By Balaji

முன்னாள் காவல்துறை அதிகாரியின் குடும்பத்தினரைக் காணச் சென்றபோது, காவல்துறையினர் கழுத்தைப் பிடித்து நெரித்துத் தள்ளினர் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராடியதால் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி எஸ்.ஆர்.தாராபுரி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூற பிரியங்கா காந்தி அவரது வீட்டிற்கு நேற்று நேரில் சென்றார். அப்படிச் செல்லும்போது, பிரியங்கா காந்தி காவல் துறையால் மரியாதைக் குறைவுடன் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

”காரில் சென்றபோது, முன்னாள் காவல்துறை அதிகாரி வீட்டிற்குப் போகக்கூடாது என காவல்துறையினர் சூழ்ந்துகொண்டு நிபந்தனை விதித்தனர். ஆனால் அதை மீறி கட்சித்தொண்டரின் ஸ்கூட்டரில் பயணித்தேன். எதற்காக காவல்துறை தடுத்து நிறுத்தியது எனத் தெரியவில்லை. என்னை சூழ்ந்துகொண்ட பெண் காவல்துறையினர் கழுத்தைப் பிடித்து கீழே தள்ளினர். ஆனால் நான் உறுதியாக இருந்தேன். காவல்துறையின் ஒடுக்குமுறையை எதிர்கொண்ட ஒவ்வொரு குடிமகனுடனும் நான் நிற்கிறேன். இது தான் எனது சத்தியாகிரகம் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அசோக் சிங் பேசுகையில், “பிரியங்கா காந்தி லோஹியாவை கடந்துசென்றபோதே போலீசார் அவரைத் தடுத்தனர். அதன்பிறகு முன்ஷி புலியா பகுதியிலும் போலீசாரால் தடுக்கப்பட்டார். அங்கிருந்து 3 முதல் 4 கிமீ வரை பிரியங்கா காந்தி நடந்தே சென்றார். அப்போது பிரியங்கா காந்தியை காவல்துறை பிடித்து கீழே தள்ளி மிகக் கடுமையாக நடந்துகொண்டனர்” என குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு கூறுகையில், “பிரியங்கா ஒருவரைச் சந்திக்க விரும்பி, தனது கவலைகளை அவரிடம் பகிர்ந்துகொள்ளச் செல்கிறார். இது அரசை எப்படி பாதிக்கிறது? ஏன் இது அரசுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்துகிறது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் காவல்துறையினர் கழுத்தைப் பிடித்துத் தள்ளியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு லக்னோ காவல்துறை மறுப்புத் தெரிவித்துள்ளது. பிரியங்கா காந்தியின் கார், திட்டமிட்ட வழியில் செல்லாமல் மாற்றுப் பாதையில் சென்றதாகத் தடுத்து நிறுத்தியதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share