கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டுமென காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி புதிதாக 1,975 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, 47 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26,917 ஆக உயர்ந்துள்ளது. 826 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடயே ஊரடங்கை அமல்படுத்தினால் மட்டும் போதாது, அதைப் பயன்படுத்தி கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும், அவ்வாறு செய்தால் மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. எனினும், 130 கோடி மக்கள்தொகை உள்ள இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 40,000 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று (ஏப்ரல் 26) தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனாவை வீழ்த்த மிகப்பெரிய அளவில் பரிசோதனை மேற்கொள்வதுதான் சரி என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். தற்போது நாளொன்றுக்கு மேற்கொள்ளப்படும் 40,000 பரிசோதனைகளை ஒரு லட்சமாக அதிகரிக்க வேண்டும். இதற்கான பரிசோதனை கருவிகள் போதுமான அளவில் இருக்கின்றன. இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் விஷயங்களை நீக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி விரைவாக முடிவுகள் எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுபோலவே காங்கிரஸ் மூத்த தலைவர் மனீஷ் திவாரி, “நம் நாட்டில் நாள்தோறும் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்த முடியும். ஆனால், ஏன் 40,000 பேருக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்ட மத்திய அரசு முயல்கிறதா அல்லது பரிசோதனையின் அளவை அதிகரித்தால், அதனால் வரும் விளைவுகளைச் சமாளிக்கத் திறமையில்லை என உணர்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
**எழில்**
�,