எந்த இடங்களில் மின்தடை ஏற்பட்டது என்பதை தெரிவித்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தாலே மின் தடை மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கும் என்று பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். அதுபோன்றுதான் பல இடங்களிலும் மின் தடை ஏற்படுவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், நடிகை குஷ்பு ட்விட்டரில், ”எங்கள் பகுதியில் ஒருநாளைக்கு 12லிருந்து 15 முறை பவர் கட் ஆகி, கட் ஆகி வருகிறது” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திருச்சி அருகே துறையூரில் உள்ள திமுக அனுதாபி ஒருவர்,” ஒருநாளைக்கு 20 முறை பவர் கட் ஆகி, கட் ஆகி, வருகிறது. எங்கள் ஊரில் மட்டும்தானா, இல்லை எல்லா ஊரிலும் இப்படிதான் பவர் கட் ஆகுதா?” என்று கேள்வி கேட்டவர், ”இதுபோன்று பல இடங்களிலும் பவர் கட் ஆவதால், திமுக வந்தாலே பவர் கட்தான் என்று மக்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்” என்று வேதனையுடன் கூறினார்.
”எந்த இடங்களில் மின் தடை ஏற்பட்டது, எப்பொழுது ஏற்பட்டது என்பதைத் தெரிவித்தால் துறை ரீதியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். மின்தடை ஏற்படக்கூடாது என்ற முதல்வர் அறிவுறுத்தலின்படி மின்வாரியம் செயல்படுகிறது” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டரில் நேற்று(ஜூன் 7) தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் முதல் 6 மாத காலத்திற்கு எந்த வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் மிகவும் அவசியமான தவிர்க்க முடியாத பராமரிப்பு பணிகள் மட்டுமே போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அதனால் ஒருசில இடங்களில் மின்சார தடை ஏற்படுகிறது என்று அமைச்சர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,