தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தபால் வாக்குகளைப் பெறும் பணி தொடங்கியது. தேர்தலையொட்டி 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
தேர்தல் ஆணையம் அறிவித்தது முதலே திமுக தபால் வாக்கு முறையில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தபால் மூலம் வாக்களிக்க உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் தொகுதிவாரியான பட்டியலை வழங்க உத்தரவிட வேண்டும் என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தபால் வாக்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியலைத் தொகுதிவாரியாக மார்ச் 29ம் தேதிக்குள் அரசியல் கட்சிகளுக்குச் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
அந்தப் பட்டியல் கொடுக்கப்படாத நிலையில், இன்று முதல் தபால் வாக்குகளைத் தேர்தல் ஆணையம் பெறத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தபால் வாக்காளர்களின் பட்டியலை வழங்காமல் தேர்தல் ஆணையம் வாக்குகளைப் பெறத் தொடங்கியுள்ளதாக திமுக சார்பில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று முறையிடப்பட்டது.
திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆர் சண்முகசுந்தரம் மற்றும் விடுதலை ஆகியோர் ஆஜராகி, உயர் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் தபால் வாக்காளர் பட்டியலை வழங்காமல் வாக்குகள் பெற தொடங்கியுள்ளதாகவும் இதுதொடர்பாக திமுக தொடர்ந்துள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதை ஏற்று வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதனிடையே, தபால் வாக்குகளை வீடுகளுக்கே நேரடியாகச் சென்று பெறும் பணி இன்று காலை சென்னையில் தொடங்கியது. இன்று முதல் 31ஆம் தேதி வரை 7 நாட்களுக்குத் தபால் வாக்குகள் பெறப்படும் என்றும் இதற்காக மாநகராட்சி சார்பில் 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ,மொத்தம் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6992 பேர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 308 பேர் என மொத்தம் 7300 பேர் தபால் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
**-பிரியா**
�,