திருச்சி மேற்கு தொகுதியில் தபால் ஓட்டு போடுவதற்காக போலீஸாருக்கு பணம் கொடுக்கப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற பரிந்துரை செய்திருக்கிறது. தேர்தல் ஆணையம். வாக்காளர்களுக்கு பணம் வழங்கியது தொடர்பான வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்படுவது தமிழகத்தில் இதுதான் முதல் முறை.
தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு தபால் ஓட்டுப் பதிவு சில நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் தபால் ஓட்டுகளுக்காக போலீஸாருக்கு திமுக சார்பில் பணம் கொடுக்கப்படுகிறது என்று திருச்சி மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் பத்மநாதன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து மேற்குதொகுதிக்கு உட்பட்ட தில்லைநகர், உறையூர், அரசு மருத்துவமனை, எடமலைப்பட்டிபுதூர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் இந்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர போலீஸ் ஆணையர் லோகநாதன் சோதனை நடத்த உத்தரவிட்டார். இந்த அடிப்படையில் போலீஸ் நிலையங்களில் நடந்த சோதனையில் அங்கே உள்ள பீரோக்களில் கவர்களில் பணம் போட்டு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தில்லைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ஏட்டு சுகந்தி, அரசு மருத்துவமனை சப்-இன்ஸ்பெக்டர் மாதரசி ஸ்டெல்லாமேரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி, நுண்ணறிவுபிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கரன், கலியமூர்த்தி ஆகிய 6 பேரை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் சஸ்பெண்ட் செய்தார்.
மேலும் போலீஸாருக்கு தபால் ஓட்டுக்காக பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிவண்ண பாரதி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வக்கீல் திமுக என்பதால் திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் நேருவுக்காகத்தான் போலீஸுக்கு பணம் கொடுக்கப்பட்டதா என்ற சர்ச்சை வெடித்தது. திருச்சி திமுக வேட்பாளர் கே.என். நேரு இதை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். தேர்தல் ஆணையத்துக்கும் இது தொடர்பாக கடிதம் எழுதியிருக்கிறார்.
மேலும் திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகுவிடம் விரிவான புகார் ஒன்றும் அளிக்கப்பட்டது.
அதில், “தபால் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக வந்த புகாரில் திருச்சி காவல் ஆணையர் செய்த விசாரணை நிமிடத்துக்கு நிமிடம் சமூக ஊடகங்களில் எப்படி பரவியது? யார் தகவல் கொடுத்தது? அதோடு, கைப்பற்றப்பட்ட பணம் திமுகவுக்கு சாதகமாக சில வழக்கறிஞர்கள் கொடுத்தது எனக் கூறப்படுகிறது. இவை எல்லாம் கே.என்.நேருவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டது எனத் தெரியவருகிறது. சமூக ஊடக நபர்கள் எந்த விதத்தில் ரகசிய விசாரணை மற்றும் அறிக்கைகளை எப்படிப் பெறுகிறார்கள்? விசாரணையின் அறிக்கைகள் கசிய விட்டதற்கு யார் பொறுப்பு?
உள்துறை அமைச்சகத்தைக் கையில் வைத்துள்ள முதலமைச்சரின் தலையீடு இல்லாமல், வருவாய்த்துறை மற்றும் தேர்தல் ஆணையம் கண்காணித்துக் கொண்டு இருக்கும்போது, போலீஸ் அதிகாரிகளின் விசாரணை குறித்த விவரங்கள் வெளி வர வாய்ப்பே இல்லை. இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் கிடைத்தால், ஆளும்கட்சியின் விளையாட்டும், தேர்தலில் வெற்றிபெறுவதற்கு அவர்கள் பின்பற்றும் குறுக்குவழித் திட்டமும் தெரியவரும்.
எனவே, இவ்விவகாரம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி, ஆளும்கட்சி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கவும், தேர்தல் நேர்மையாக நடைபெறவும் தேர்தல் ஆணையம் வழிவகை செய்ய வேண்டும்” என்று தேர்தல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டது.
திருச்சி காவல் ஆணையர் லோகநாதனின் விசாரணை பற்றி திமுக கொடுத்த புகார் திருச்சி மேற்கு தேர்தல் பார்வையாளர் எஸ்.என்.கிரிஷுக்கு அனுப்பப்பட்டது. அந்தப் புகாரை விசாரித்த தேர்தல் பார்வையாளரும் ஒடிசா மாநில ஐ.ஏ.எஸ்.அதிகாரியுமான எஸ்.என். கிரிஷ் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பினார். அதன் அடிப்படையில் பணியில் அலட்சியமாக இருந்ததாக நேற்று (மார்ச் 30) திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதனை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றியும், பொன்மலை சரக உதவி ஆணையர் தமிழ்மாறனை பணியிடை நீக்கம் செய்தும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்சி மேற்கு தொகுதியின் தேர்தல் பார்வையாளரான எஸ்.என். கிரிஷ் பரிந்துரையின் பேரில் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்தது.
தேர்தல் பார்வையாளரான கிரிஷின் விசாரணையை அடுத்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்பட்டது ஆளுந்தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக தமிழக அரசின் சில சீனியர் அதிகாரிகள், ‘இந்த விவகாரத்தில் சிபிஐசிடி விசாரணை நடத்தினால், நாளை மாநிலத்தில் அரசியல் சூழல் மாறும் நிலையில் சிக்கலாகிவிடும். எனவே இதை சிபிஐ விசாரணைக்கு மாற்றி மத்திய அரசின் வசம் கொண்டு செல்லவேண்டும்”என்று ஆலோசனை நடத்தி தேர்தல் ஆணையத்துக்கு அழுத்தம் கொடுத்தனர்.
இதன் பேரிலேயே அடுத்த திருப்பமாக இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், இதை சிபிஐ விசாரிக்குமாறு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருக்கிறது.
மத்திய பணியாளர் நலத்துறைக்கு தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளபோது திருச்சி தில்லை நகர் காவல் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையிலும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அடங்கிய கவர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன், மற்றும் துணை ஆணையர் தமிழ்மாறன் மீதும் புகார்கள் வந்துள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது, மத்திய பிரதேசத்தில் பணப்பட்டுவாடா தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது போல இந்த விவகாரத்திலும் விசாரணை நடத்த வேண்டும்” என தெரிவித்துள்ளது.
சிபிசிஐடி விசாரணையில் இருந்து, சிபிஐ விசாரணைக்குச் சென்ற முழுமையான பின்னணி இதுதான்.
**-ராஜ்**
�,”