அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் இருந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தொற்றுநோய்த் தாக்கம் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதனால், கல்லூரி மாணவர்களுக்கு மூன்று செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதுபோன்று 10,11, வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. முதல்வருக்கு மாணவர்கள் நன்றி தெரிவிக்கும் மீம்ஸ்களும் சமூகவலைதளங்களில் பரவியது.
2021ல் மே மாதம் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தது. அந்த நேரத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்ததால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் தொற்று குறைந்ததையடுத்து, செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு மாணவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக் கோரி கடந்த நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஆன்லைனிலே தேர்வை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த முடியாது. தேர்வுக்கு மாணவர்கள் தயார் ஆகுவதற்கு இரண்டு மாத கால அவகாசம் தந்து ஜனவரி 20ஆம்தேதிக்கு பிறகு தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என்று உயர் கல்வித் துறை தெரிவித்தது.
தமிழ்நாட்டில் டிசம்பர் மாத இறுதியிலிருந்தே தினசரி கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியது. தொடர்ந்து கொரோனா அதிகரித்து காணப்படுவதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 31ஆம் தேதிவரை விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், செமஸ்டர் தேர்வுகள் நேரடி முறையில் மட்டுமே நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 21ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி,”செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாக இருப்பதால், ஆன்லைனில் நடத்த முடிவு செய்துள்ளோம். பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும். இறுதி செமஸ்டர் தேர்வு மட்டும் நேரடியாக நடைபெறும். பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.
இந்த அறிவிப்பு மாணவர்களிடையே அளவில்லாத சந்தோஷத்தை ஏற்படுத்தியது. ஆனால் எந்தெந்த செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும், அரியர் மாணவர்களுக்கு எந்தமுறையில் தேர்வு நடைபெறும் என்பது குறித்து மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று(ஜனவரி 24) தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “ கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாடு முழுவதும் 20,00,875 மாணவர்கள் ஆன்லைன் தேர்வை எழுதுகின்றனர். கடந்த நவம்பர்- டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு ஆன்லைனிலும், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு நேரடியாகவும் நடைபெறும். ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறுவதால் 12.94 லட்சம் கலை கல்லூரி மாணவர்கள் பயனடைவர். மேலும், பல்கலைக்கழகங்களில் பயிலும் 52,301 மாணவர்களும், 4.57 பொறியியல் மாணவர்களும், 1.97 லட்சம் பாலிடெக்னிக் மாணவர்களும் ஆன்லைன் தேர்வால் பயனடைவார்கள். அதுபோன்று அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடத்தப்படும்” என்று கூறினார்.
இந்த அறிவிப்பையடுத்து, தற்போது மாணவர்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து வருவதுடன், முன்னாள் முதல்வர் எடப்பாடியை, அமைச்சர் பொன்முடி பீட் செய்து விட்டார் என்றும் மாணவர்கள் பேசி வருகின்றனர்.
**-வினிதா**
�,