பொங்கல் பரிசு டோக்கனை அதிமுகவினர் விநியோகிப்பதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2500 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார். ஜனவரி 4ஆம் தேதியிலிருந்து இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு டோக்கனை ரேஷன் பணியாளர்கள் மூலமாக வழங்காமல், தேர்தல் நேரத்தில் அதிமுகவினர் மூலம் வழங்குவதாகவும், அதனை தடுக்க வேண்டுமெனவும் ஸ்டாலின் வலியுறுத்தினார். இதுதொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹுவிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று புகார் அளித்தார்.
தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் எச்சரித்தார். ஆனால், அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்கிற எண்ணத்தில் பரிசுப் பொருள் வழங்குவதை தடுக்க திமுக சூழ்ச்சி செய்வதாக முதல்வர் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற அமர்வு முன்பு திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். அரசு வழங்கும் பொங்கல் பரிசு ரூ. 2,500 க்கான டோக்கன்கள் அதிமுகவினர் மூலமாக வழங்கப்படுகிறது. ஆளுங்கட்சியினர் டோக்கன் வழங்குவதால், பரிசுத் தொகை பெரும்பாலானோருக்கு கிடைக்காது என்றார்.
அதுதொடர்பான ஆவணங்களை நீதிபதிகள் கேட்ட நிலையில், புகைப்படங்கள், நோட்டீஸ்கள் சமர்பிக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளின் புகைப்படங்கள், பெயர்கள் இல்லாமலும், அதிமுகவின் சின்னம் மற்றும் ஸ்டிக்கர் இன்றி பொங்கல் பரிசு டோக்கனை விநியோகிக்க வேண்டும். டோக்கனை ரேசன் கடை ஊழியர்களே தர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனுவாக தாக்கல் செய்தார். அவசர வழக்காக ஏற்று விசாரணை நடத்துவது குறித்து விரைந்து பரீசிலிப்பதாக நீதிபதிகள் உறுதியளித்துள்ளனர்.
**எழில்**
�,”