நாளை முதல் பொங்கல் பரிசு விநியோகம்!

Published On:

| By Balaji

பொங்கல் பரிசு வழங்குவதை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி வைப்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நாளை முதல் பொங்கல் பரிசு விநியோகிக்கப்பட இருப்பதாகவும், தலைமைச் செயலகத்தில் முதல்வர் தொடங்கி வைப்பார் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதுமுள்ள 2 கோடிக்கும் அதிகமான அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள்தூள், துணிப்பை உள்பட மொத்தம் 21 பொருட்கள் ஜனவரி 3ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஒவ்வோர் அட்டைக்கும் ரூ.505 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்படவுள்ள நிலையில். இத்திட்டத்துக்காகத் தமிழக அரசு ரூ.1,088 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

இந்த நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை வழங்கி வருகின்றனர். அந்த டோக்கனில் பரிசு தொகுப்பு பெறுவதற்கான தேதி, நேரம் இடம் பெற்றுள்ளது. டோக்கன் கொடுக்கும் பணி இன்னும் நிறைவடையவில்லை.

இதனால் இன்று பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நாளை முதல் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் டோக்கன் வழங்கி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நாளை தலைமைச் செயலகத்தில் இந்தத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார். ஜனவரி 10ஆம் தேதி வரை டோக்கன் படி பொங்கல் பரிசு விநியோகிக்கப்படவுள்ளது. அன்றைய தினத்துக்குள் பெற முடியாதவர்கள் பண்டிகை முடிந்த பிறகு கூட வாங்கிக்கொள்ளலாம் என்று உணவு வழங்கல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பொங்கல் பரிசு வழங்கப்படுவதைக் கண்காணிக்க மண்டல வாரியாக தமிழ்நாடு முழுவதும் 12 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பின் தரம் குறித்தும் ஆய்வு செய்யவும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share