வன்கொடுமை வழக்கில் கட்சியினரை காத்த அதிமுக அரசு: ஸ்டாலின்

Published On:

| By Balaji

பாலியல் வன்கொடுமை வழக்கில் தங்களது கட்சியினரை அதிமுக அரசு காத்ததாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

பொள்ளாச்சியில் இளம்பெண்கள், மாணவிகளை ஃபேஸ்புக்கில் நட்பு கொண்டு, அவர்களைத் தனியான இடத்துக்கு வரவழைத்து, மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்து, வீடியோ எடுத்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக பொள்ளாச்சி நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம் உள்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்தனர். இதனையடுத்து, அருளானந்தம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் இன்று (ஜனவரி 6) வெளியிட்ட அறிக்கையில், ஆறேழு ஆண்டுகளாக பல நூறு பெண்கள் சீரழிக்கப்பட்ட பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் அதிமுக நகர மாணவரணிச் செயலாளர் – கூட்டாளிகளை சிபிஐ கைது செய்திருக்கிறது. பாலியல் கொடூர வழக்கில் தொடர்புடைய தமது கட்சியினரைக் காத்து வருகிறது முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி என்று விமர்சித்தார்.

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து, அதிமுகவினர் உட்பட தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவர் கூடத் தப்பிவிட சிபிஐ அனுமதிக்கக் கூடாது. அவர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் மூன்று பேர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், சிபிஐ விரைவாக செயல்பட்டு எஞ்சிய குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார் அமமுக பொதுச் செயலாளர் தினகரன்.

அத்துடன், அப்பாவி பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

*எழில்*�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share