தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகிற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 4ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மொத்தம் 74,416 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கடுத்த பணியாக அனைத்துக் கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட தயாராகி வருகின்றன. இன்று முதலே பெரும்பாலான கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்குகின்றன. தேர்தல் பிரச்சாரத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், பிரச்சாரம் குறித்து ஒவ்வொரு கட்சியும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
**திமுக**
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சரின் தேர்தல் பரப்புரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று (பிப்ரவரி 6) தொடங்கி, திருநெல்வேலி மாவட்டத்தில் பிப்ரவரி17ஆம் தேதி நிறைவடைகிறது.
பிப்ரவரி 7இல் சேலம், பிப்ரவரி 8இல் கடலூர், பிப்ரவரி 9இல் தூத்துக்குடி, பிப்ரவரி 10இல் ஈரோடு, பிப்ரவரி 11இல் கன்னியாகுமரி, பிப்ரவரி 12இல் திருப்பூர், பிப்ரவரி 13இல் திண்டுக்கல், பிப்ரவரி 14இல் மதுரை, பிப்ரவரி 15இல் தஞ்சாவூர், பிப்ரவரி 17இல் நெல்லை என முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பிரச்சாரம் செய்யவுள்ளார்.
**மக்கள் நீதி மய்யம்**
இன்று (பிப்ரவரி 6) காலை 11 மணியளவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், விசாலாட்சி தோட்டம் பகுதியில் (மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையம் அருகில்) உரிய கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றியும், மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும் நமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். இதற்கு நம் கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
**நாம் தமிழர்**
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ‘விவசாயி’ சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை 5 மணிக்கு மதுரை, தேனி, திண்டுக்கல்,விருதுநகர் மாவட்டங்களிலும் நாளை (பிப்ரவரி 7) ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்திலும் பிரச்சாரம் செய்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
**பாஜக**
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, இன்று மாலை 3 மணிக்கு சென்னையில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். பிப்ரவரி 9ஆம் தேதி வரை முதற்கட்ட பிரச்சாரம் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**அதிமுக**
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நாளை(பிப்ரவரி 7) முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். காஞ்சிபுரம், வேலூர், ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கரூர், கடலூர், சென்னை, தாம்பரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகரில் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஓபிஎஸ் பிரச்சாரம் செய்ய உள்ளார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் பிப்ரவரி 7ஆம் தேதி சிவகாசியில் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
**-வினிதா**
இன்று தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கும் கட்சிகள்!
Published On:
| By admin

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel