ரம்ஜான்: தலைவர்கள் வாழ்த்து!

politics

புனித ரமலான் மாதம் ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கியது. இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் பிறந்ததும் நோன்பு இருந்து தொழுகையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், மே 2ஆம் தேதி பிறை தெரியும் அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், தமிழகத்தில் 3ஆம் தேதி தான் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என இஸ்லாமியர்களின் தலைமை காஜி முப்தி முகம்மது சலாவுதீன் அயூப் அறிவித்தார்.
அதன்படி இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.
**ஆளுநர் ஆர்.என்.ரவி**
முகமது நபியின் அன்புணர்வு, அறவுரை குறித்த போதனைகள், எக்காலத்துக்கும் நம்முடன் நின்று, சமூகத்தின் முன்னேற்றத்திற்காக நாட்டுப்பற்றுடன் கூடிய, தாய் நாட்டு மீதான உயர்வு மனப்பான்மையுடன் நாம் நேர்மையான, முற்போக்கான வாழ்க்கையை நடத்திட நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.
சமுதாய மற்றும் வளமான இந்தியாவின் சகோதரத்துவத்தை மேம்படுத்தவும், நன்மை மற்றும் நல்வாழ்வுக்கான அன்பைப் பரப்பவும், போதிக்கப்படும் தியாகம், அகிம்சை, பொறுமை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் தார்மீகப் பாதையைக் கடைப்பிடிக்க இந்த நன்னாளில் உறுதி எடுத்துக் கொள்வோம்.

**முதல்வர் ஸ்டாலின்**
பெரும்பான்மைவாதமும் மதவாதமும் தலைதூக்காத சமய நல்லிணக்கப் பூங்காவாகத் தமிழகத்தைக் காத்து நிற்கும் “திராவிட மாடல்” ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஒற்றுமையுணர்வும் சகோதரப் பாசமும் நிலைத்திருப்பதால்தான் தமிழகம் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.
இஸ்லாமிய மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்காகப் பல திட்டங்களை அளிக்கும், அவர்களுக்கு ஒரு சோதனை என்றால் அவர்களுக்குத் துணை நிற்கும் காவலாக விளங்கி வரும் தமிழக அரசின் சார்பில் மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது புனித ரமலான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

**எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி**

அருள் நிறைந்த ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் எனது அருமை இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிறை அமைதியும், நீண்ட ஆயுளையும் தந்து நிறைந்த நற்செயல்களைச் செய்ய அல்லாஹ் அருள் புரிவாராக…

**எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம்**

ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, நல்லதை மட்டுமே மனதில் நிலைநிறுத்தி, அனைவரும் நலம்பெற்று வாழ வேண்டும் என்ற உயரிய நோக்குடன் ஈகைத் திருநாளாம் ரம்ஜான் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடவிருக்கும் அனைத்து இஸ்லாமியப் பெருமக்களுக்கும் எனது அன்பார்ந்த நல்வாழ்த்துகள்!

**தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி**
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நாடு முழுவதிலும் உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரண்டு சிறுபான்மை மக்களின் உரிமைகளைக் காப்பார்கள் என்பதை ரமலான் செய்தியாகத் தமிழக காங்கிரஸ் கூற விரும்புகிறது.
இந்த இனிய ஈகை திருநாளில் தக்பீர் முழக்கம் கூறி, தொழுது, அதற்கு முன்னர் ஏழைகளுக்கு ‘சதக்கத்துல் பித்ர்’ என்னும் பெருநாள் கொடை வழங்கி, அனைவருடன் உணவருந்தி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்.

**பாமக நிறுவனர் ராமதாஸ்**
உலகம் முழுவதும் வாழும் மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருக இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்.

**தேமுதிக தலைவர் விஜயகாந்த்**
ரம்ஜான் வாழ்த்துகள். இந்த இனிய நன்னாளில் மக்கள் தங்களிடையே உள்ள வேற்றுமையை போக்கி, ஒற்றுமையை வளர்த்து,மனிதநேயம் மலரவும்,நாடு வளம் பெறவும்,அனைவரும் முன்னேற வேண்டும் என்கின்ற நல்லெண்ணத்தோடு, இஸ்லாமியர் அனைவருக்கும் எனது ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

**பாஜக தலைவர் அண்ணாமலை**
புனித நோன்பிருந்து, ரமலான் திருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமியச் சொந்தங்களுக்கும், நல்ல உடல்நலத்தோடும், மனநிறைவோடும், அமைதியோடும், சமாதானத்தோடும், சகோதர வாஞ்சையோடும், மகிழ்ச்சியாக வாழ என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

**மதிமுக பொதுச் செயலாளர் வைகோ**
எல்லையற்ற நிலப்பரப்பை ஆட்சி செய்தபோதிலும், ஓர் ஏழையைப் போலவே வாழ்க்கைச் சூழலை வகுத்துக்கொண்டு வாழ்ந்த அண்ணல் பெருமானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை என்ற அழகிய முன்மாதிரியைப் பின்பற்றி நேர்மையுடனும், தூய்மையுடனும் செயல்படுவோம் என்று நானிலத்திற்கு அறிவிக்கும் நாள் இந்த நாள்.
இந்த இனிய நன்னாளில், சமத்துவம் தழைக்கவும், சகோதரத்துவம் நிலைக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை மேம்படவும் உறுதி கொண்டு, இஸ்லாமியப் பெருமக்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

**விசிக தலைவர் திருமாவளவன்**
இஸ்லாம் என்பது சகோதரத்துவத்துக்கும் சமத்துவத்துக்குமான ஒரு பண்பாட்டு நெறியாக, வாழ்வியல் கோட்பாடாக விளங்குவதைக் காண முடிகிறது. இத்தகைய வாழ்வியல் கோட்பாட்டை நடைமுறைப்படுத்தும் வகையில், இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

**அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்**
சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதமெல்லாம் இல்லாமல், அன்பும் அமைதியும் பெருகி எங்கும் மகிழ்ச்சி நிறைந்திட வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *