விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

Published On:

| By Balaji

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் உடலுக்கு ஆ.ராசா, வைகோ, திருமாவளவன், சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

திமுக சார்பில் கட்சியின் துணை பொதுச் செயலாளர், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆ.ராசா,

“திரையுலகில் கலைவாணர், எம்.ஆர்.ராதாவுக்குப் பிறகு சிரிப்போடும் சிந்தனையோடும் பகுத்தறிவு கொள்கைகளை வெளிப்படுத்திய மாபெரும் கலைஞரான விவேக் மறைவு, கலையுலகத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்ச்சமுதாயத்துக்கும் பேரிழப்பு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருந்தி இரங்கல் தெரிவித்தார்.

அவர் தலைநகரில் இல்லாத காரணத்தினால், திமுக சார்பிலும், அவர் சார்பிலும், மறைந்த நடிகர் விவேக் உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்த அறிவுறுத்தியிருந்தார். அதனடிப்படையில், திமுக தலைவர் சார்பிலும், திமுக சார்பிலும் எங்களின் ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவர் கூறுகையில், “விவேக் நடிகர் மட்டுமல்ல. சமூக சேவகர். எங்கு கண்ணீர் வடிகிறதோ. அதைத் துடைக்கத் துடிப்பவர். இயற்கையை வளப்படுத்துவதற்காக லட்சக் கணக்கான மரங்களை நட்டவர். ஒழுக்கம் நிறைந்தவர். தமிழ்ச் சமூகம் உன்னத நிலைக்கு வர வேண்டும் என்று பாடுபட்டவர். திரையுலகிற்கு விவேக் ஒரு முன்னுதாரணம்” என்று கூறினார்.

விசிக தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share