தமிழகத்தில் எதிர்க்கட்சியான திமுகவை எதிர்த்து பாஜக, தலைநகர் சென்னையில் ஆர்பாட்டம் நடத்தியிருக்கிறது.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பொறுப்பேற்ற பிறகு திமுக மீது தொடர் விமர்சனங்களை வைத்து வருகிறார். சமீபத்திய அவரது பல கூட்டங்களில் ஸ்டாலின் முறையான எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட வில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார்.
இந்நிலையில் செப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமர் மோடியின் பிறந்தநாளை ஒட்டி சென்னை நங்கநல்லூரில் பாஜகவினர் செய்த விளம்பரங்களை திமுகவினர் அழித்திருக்கிறார்கள். இதை எதிர்த்து அங்கே பாஜகவினர் ஒன்று கூடினர். அப்போது அங்கே வந்த திமுக பகுதிச் செயலாளர் சந்திரன் பாஜகவினரை மிரட்டியுள்ளார். திமுக வட்டச் செயலாளர் நடராஜன் பாஜக மகளிரணியினர் மீது மோட்டார் சைக்கிளால் மோதியுள்ளார். இதில் மீனாட்சி, சரஸ்வதி ஆகிய இரு பாஜக மகளிரணி நிர்வாகிகள் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இத்தகவல் பாஜக மாநிலத் தலைவர் முருகனுக்கு தெரிவிக்கப்பட்டு, அவரது அறிவுறுத்தலின்படி திமுகவினருக்கு எதிராக சென்னையில் பாஜக இன்று (செப்டம்பர் 22) 7 இடங்களில் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டது.
இந்நிலையில் அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக ஊடகப் பிரிவு தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத்திடம் பேசினோம்.
“சமீப நாட்களாக பெண்கள் அதிக அளவில் பாஜகவில் சேர்ந்து வருகிறார்கள். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் திமுகவினர் பாஜக மீது தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இது பாஜகவின் மகளிரணி மீது மட்டும் நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல, ஒட்டுமொத்த பெண்களுக்கு எதிரான தாக்குதலாகத்தான் பார்க்கிறோம். அதுவும் போலீஸார் முன்னிலையில் எங்கள் நிர்வாகிகளைத் தாக்கியிருக்கிறார்கள். இதை போலீஸ் தடுக்கவில்லை.நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இன்று ஆர்பாட்டம் நடத்திய பாஜகவினரை ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் கைது செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. போலீஸாரே திமுகவினருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்” என்று வெடித்தார்.
**-வேந்தன்**�,